கட்சியைப் பதிவு செய்யாமல், கட்சிக்கென்று தனி சின்னம் இல்லாமல் தேர்தல் களத்தில் இறங்குவதில்லை என்று முடிவெடுத்தோம் - TTV Dhinakaran
தமிழகத்தில் காலியாக இருக்கும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்க உள்ளது. களத்தில் திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணிக்கு இடையில் கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது. இதில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக-வும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இடைத் தேர்தலில் போட்டி இல்லை என்று அக்கட்சி அறிவித்துள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக, திமுக மற்றும் அதிமுக-வுக்கு அடுத்தபடியாக 3வது பெரும் கட்சியாக உருவெடுத்தது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம், ஒரு நிருபர், “அமமுக மீண்டும் இடைத் தேர்தலில் இருந்து விலகியுள்ளது. இது தோல்வி பயத்தினால் என்று எடுத்துக் கொள்ளலாமா?” என்றார்.
அதற்கு தினகரன், சிரித்துக் கொண்டே, “அதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், இந்த முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்பது குறித்து நாங்கள் முன்னரே தெளிவாக விளக்கிவிட்டோம். கட்சியைப் பதிவு செய்யாமல், கட்சிக்கென்று தனி சின்னம் இல்லாமல் தேர்தல் களத்தில் இறங்குவதில்லை என்று முடிவெடுத்தோம். அதன் அடிப்படையில்தான் இடைத் தேர்தலில் போட்டியில்லை என்று கூறினோம். ஆனால், உங்கள் விருப்பத்துக்கு எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கேலியாக பதிலளித்தார்.
‘சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவாரா?' என்ற கேள்விக்கு தினகரன், “அதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம்“ என்று பதில் அளித்தார்.