வரும் மக்களவை தேர்தலில் அதிமுக - பாமக இடையேயான கூட்டணி உறுதியாகி உள்ளது. அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 7 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர பாமகவிற்கு ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாமக முழு ஆதரவு கொடுக்கும் என இரண்டு கட்சிகளுடனான கூட்டணி ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், அதிமுக - பாஜக கூட்டணி குறித்த இறுதி கட்ட பேச்சுவார்த்தை சென்னை கிரவுன் பிளாசா ஓட்டலில் இன்று நடைபெற்றது. பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது,
அரசியலில் வேறுபாடுகள் இருக்கும் கட்சிகள் தேர்தல் நேரத்தில் கூட்டணி வைப்பது வாடிக்கை. ஜெயலலிதா ஒரு குற்றவாளி, அவர் உயிருடன் இருந்திருந்தால் சிறைச்சாலையில் இருந்திருப்பார் அவருக்கு நினைவிடம் கட்டக்கூடாது என அறிக்கை கொடுத்தவர்களுடன் சேரும் அளவுக்கு எடப்பாடியும், பன்னீர்செல்வமும் சென்றிருக்கிறார்கள்.
கருத்து கல்லைக் கட்டிக்கொண்டு எடப்பாடி பழனிசாமி கிணற்றில் இறங்கியுள்ளார். 40 தொகுதிகளிலும் தோற்க போகிற கட்சிகள் கூட்டணி அமைக்கின்றன. ஜெயலலிதாவின் ஆன்மாவே இதற்கு தேர்தலில் தக்க பாடம் புகட்டும் என்று அவர் கூறியுள்ளார்.