This Article is From Dec 14, 2018

''செந்தில் பாலாஜிக்கு விழா நடத்தும் அளவுக்கு திமுக வலிமையாக இருக்கிறது'' - டிடிவி கிண்டல்

டெபாசிட் காலியானதில் இருந்து திமுகவினர் கடந்த ஒரு வருடமாக எனக்கு எதிராக முயற்சி செய்து வருகின்றனர். இதில் அவர்களுக்கு அல்ப சந்தோஷம். இருந்துவிட்டு போகட்டும் என்று டிடிவி கூறியுள்ளார்.

''செந்தில் பாலாஜிக்கு விழா நடத்தும் அளவுக்கு திமுக வலிமையாக இருக்கிறது'' - டிடிவி கிண்டல்

டிடிவி தினகரன் அணியான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்திருக்கிறார். இதுகுறித்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அடையாறில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

தம்பி செந்தில் பாலாஜியை எனக்கு 2006-ல் இருந்து நன்றாக தெரியும். அப்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் முன்னாள் அமைச்சர் சின்னச்சாமிக்கு பதிலாக இன்னொருவரை நிறுத்த வேண்டும் என ஜெயலலிதா கூறினார். அந்த நேரத்தில் மாணவர் அணி மாவட்ட செயலாளராக செந்தில் பாலாஜி இருந்தார். அவர் உள்பட சிலரை வேட்பாளராக நியமிக்க நான்தான் பரிந்துரை செய்தேன்.

தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார். 2007-க்கு பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கினேன். இதை சொல்வது எடப்பாடி, ஜெயக்குமாருக்கு ஹேப்பியாக இருக்கும். அதற்காக சொல்கிறேன். பின்னர் செந்தில் பாலாஜி படிப்படியாக வளர்ச்சி அடைந்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் என்ன நடந்தது என்பது எல்லாருக்கும் தெரியும். 4 மாதங்களுக்கு முன்பு என்னை சந்தித்த செந்தில் பாலாஜி தனக்கு தனிப்பட்ட பிரச்னைகள் இருப்பதாகவும், அதை முடிக்க வேண்டும் என்பதால் சில காலம் ஆக்டிவாக இருக்க மாட்டேன் என்றும் சொன்னார். கஜா புயல் பாதிப்பின்போது அவர்கள் மாவட்டத்தில் இருந்து நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார்.

டிசம்பர் 5-ல் அம்மா நினைவு நாளுக்கு அவர் வரவில்லை. வழக்கு விஷயமாக வக்கீலுடன் இருப்பதால் செந்தில் பாலாஜி வரவில்லை என்று எனக்கு தகவல் சொன்னார்கள். 3 நாட்களுக்கு முன்பு திமுகவில் அவர் சேரப்போவதாக கேள்விப்பட்டேன்.

நல்ல தம்பிதான் அவர். அதற்காக யாரையும் கட்டாயப்படுத்தி கட்சியில் வைக்க முடியாது. அவர் எங்கிருந்தாலும் வாழ்க. அதுபற்றி எங்களுக்கு பிரச்னை இல்லை.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூடாரம் காலியாகி விட்டதாக சொல்கிறார்கள். அப்படி ஏதும் நடக்கவில்லை. செந்தில் பாலாஜி கட்சியை விட்டு சென்றதில் வருத்தம் ஏதும் இல்லை. அது அவருடைய சொந்த விருப்பம். ஆனால் கட்சி உறுப்பினர் படிவங்கள் அவரிடம் உள்ளன. பல நிர்வாகிகள் வியர்வை சிந்தி, ரத்தம் சிந்தி, உழைத்து அந்த படிவங்கள் நிரப்பப்பட்டுள்ளது.

அதை மட்டும் செந்தில் பாலாஜி தந்து விட்டால் எங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும். இந்த வருத்தம்தான் இருக்கிறதே தவிர, அவர் கட்சியை விட்டு போனதில் வருத்தம் இல்லை.

செந்தில் பாலாஜியை விடுங்கள்; அவரை மாதிரி ஒரு நிர்வாகிய எங்க கட்சியில் இருந்து இழுத்து அதை பெரிய விழாவாக நடத்தும் அளவுக்கு திமுகவுக்கு அவசியம் இருக்கு... திமுக அவ்வளவு பலமாக இருக்கிறது என்பதற்கு இதை விட ஒரு சாட்சி எதுவும் கிடையாது.

ஆர்.கே.நகரில் என் பெயரிலேயே 2,3 வேட்பாளர்களை நிறுத்தினார்கள். அங்கு டெபாசிட் காலியானதில் இருந்து திமுகவினர் கடந்த ஒரு வருடமாக எனக்கு எதிராக முயற்சி செய்து வருகின்றனர். இதில் அவர்களுக்கு அல்ப சந்தோஷம். இருந்துவிட்டு போகட்டும்.

இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.
 

.