This Article is From Apr 19, 2019

அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு!

சென்னையில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலாசனை கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு!

அமமுகவை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதிமுக மீதான உரிமை கோரும் வழக்கை, சிறையில் உள்ள சசிகலா நடத்த இருப்பதாகவும், அதனால் அமமுகவின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் பொறுப்பேற்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக, மக்களவைத் தேர்தலுக்கு அமமுக சார்பில் குக்கர் சின்னம் கோரிய வழக்கில், அமமுக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்ல என்பதால், அவர்களுக்கு அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியது.

இதில், அமமுகவை கட்சியாக பதிவு செய்ய தயார் என டிடிவி தினகரன் கூறியிருந்தார். இதில், அமமுக கட்சியை இன்றே பதிவு செய்தாலும் குக்கர் அல்லது பொதுசின்னத்தை உடனே தரமுடியாது என்றும் சின்னத்தை ஒதுக்க 30 நாட்கள் ஆகும் என ஆணையம் தெரிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து, டிடிவி தினகரனுக்கு தேர்தல்களில் பொதுச்சின்னம் தர பரிசீலிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில், மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலுக்கு அமமுகவிற்கு 'பரிசுப்பெட்டி'சின்னம் ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் அமமுகவைச் சேர்ந்த வேட்பாளர்கள் சுயேச்சையாகவே போட்டியிட்டனர்.

இந்நிலையில், தேர்தல் சின்னம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்த போது, நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி, அமமுகவை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவெடுத்துள்ளார். இதற்காக, இன்று நடந்த அமமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆலோசனைக்கு பின்னர் அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் பதவியேற்றார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

.