அடுத்த தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும் என்கிறார் டி.டி.வி. தினகரன்
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக அதிமுக அரசு அனைத்து மாவட்டங்களிலும் நடத்தி வந்தது. இந்நிலையில் சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது. இதில் பங்கேற்பதை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டி.டி.வி. தினகரன் தவிர்த்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், பொதுமக்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் கொடுத்து, சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு அதிமுகவினர் அழைத்து வந்துள்ளனர். வந்தவர்கள் அனைவரும் தங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் என்ற தவறான தகவலை பரப்புகிறார்கள். அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு இல்லை.
உண்மையான விசுவாசிகள் அனைவரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில்தான் உள்ளனர். வரும் பொதுத் தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும். எம்.எல்.ஏ. என்ற அடிப்படையில் எனது பெயரை அழைப்பிதழில் இடம்பெறச் செய்துள்ளனர். உண்மையிலேயே நான் விழாவில் பங்கேற்க வேண்டும் என விரும்பியிருந்தால் என்னை அவர்கள் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்றார்.
முன்னதாக அரசியல் ஆதாயத்திற்காக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை அதிமுக நடத்துவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார்.