தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், இரண்டாவது நினைவு நாள் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன், சென்னையில் அமைதி ஊர்வலம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஏழைகளுக்கு ஏற்றம் தந்து, தமிழகத்தின் காவல் அரசாக திகழ்ந்திட்ட நம் அன்புத்தாயின் மறைவுக்குப் பின்னால், தன்னலக்காரர்களின் பேராசையினால், எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட கழகம் இன்று சிக்குண்டு இருப்பதையும், தன் அடையாளத்தையும், தனித் தன்மையையும் இழந்த காரணத்தால் அன்று தமிழகத்தின் கவசமாக திகழ்ந்த இயக்கம் இன்று பூண்டிருக்கும் அவலக் கோலத்தை மாற்றிடவே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அவதரித்து, சுயலக்கூட்டத்திடமிருந்து அதிமுக-வை மீட்கும் இயக்கமாக எழுந்துள்ளது.
இந்த சத்தியப் போராட்டத்திற்கு தமிழக மக்களும், 90 சதவிகிதத்துக்கும் மேலான அதிமுக தொண்டர்களும் தங்களது பேராதரவை வழங்கி வருவதை ஒவ்வொரு களத்திலும் நாம் கண் கூடாகப் பார்த்து வருகிறோம்.
இப்படிப்பட்ட சூழலில், ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் டிசம்பர் 5 ஆம் தேதி வருகிறது. இதையொட்டி, சென்னையில், கழகத்தின் சார்பில் நடைபெறவுள்ள மௌன ஊர்வலத்தில் ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்களாகிய நாம் அணி திரள்வோம். என் விழிகள் உங்களை எதிர்நோக்கி..!' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.