This Article is From Jun 01, 2018

தூத்துக்குடி மரணங்களுக்கு சமூக விரோதிகள்தான் காரணம்! - ரஜினிகாந்த் ஆவேசம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் தமிழகக் காவல்துறை நடத்திய தாக்குதலில் 13 பேர் பலியாகினர்

Rajinikanth called for action against those who attacked policemen during the May 22 protest. (File)

ஹைலைட்ஸ்

  • தூத்துக்குடியில் காவல்துறை நடத்திய தாக்குதலில் 13 பேர் பலியாகினர்
  • பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்ல தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த்
  • துப்பாக்கிச்சூடுக்கு காரணமே சமூக விரோதிகளின் ஊடுருவல்தான் எனக் கருத்து
TUTICORIN: தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் தமிழகக் காவல்துறை நடத்திய தாக்குதலில் 13 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் சொல்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்று தூத்துக்குடிக்குச் சென்றார். அங்கு மக்களைச் சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார் ரஜினி.

நடிகர்களில் கமல் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்து கட்சியும் தொடங்கிவிட்ட நிலையில், ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து ஐந்து மாதங்களுக்கு முன்னர்தான் அறிவித்தார். ஆனால் இதுவரையில் கட்சி எதுவும் தொடங்கவும் இல்லை அதுகுறித்த அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ஆவேசத்துடன் பதிலளித்தார் ரஜினிகாந்த்.

அவர் கூறுகையில், “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு முக்கியக் காரணமே சமூக விரோதிகளின் ஊடுருவல்தான். மக்களின் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து காவல்துறையினரைத் தாக்கு பொதுச் சொத்துக்கும் சேதம் விளைவித்துள்ளனர். அச்சமூக விரோதிகளை அடையாளம் கண்டு தமிழக அரசு அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

சமூக விரோதிகளை எப்படிக் காரணம் காட்டலாம் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு ரஜினி பதிலளிக்கையில், “ எப்படித் தெரியும் எனக் கேட்காதீர்கள். எனக்குத் தெரியும். எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல் ஸ்டெர்லைட்டிலும் கடைசிநாளில் சமூகவிரோதிகளால் பிரச்சனை. காவல்துறை மீது தாக்குதல் நடத்தினால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் போலீசை அடித்தது, ஆட்சியர் அலுவலகம், குடியிருப்பை எரித்தது சமூக விரோதிகள்தான்” என ஆவேசத்துடன் கூறினார்.

ஸ்டெர்லைட் போராட்ட பலிகளுக்குப் பின்னர் தமிழக அரசு சமீபத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட உத்தரவிட்டது. ஆனால், எதிர்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் தமிழக அரசின் உத்தரவு வலுவானதாக இல்லை. லண்டன் வேதாந்தா நினைத்தால் நீதிமன்றம் மூலம் மீண்டும் ஆலையைத் திறக்க வாய்ப்புள்ளது என குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்தியாவில் சுற்றுச்சூழலைக் காக்க வேண்டி நடந்த போராட்டங்களுள் தூத்துக்குடி போராட்டம் பெரியது. கடந்த 2007-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடந்த நந்திகிராம் போராட்டத்தில் போராடிய மக்களுள் 14 பேர் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் நடந்த போராட்டங்களுள் கொடுமையானதாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் மாறியுள்ளது.
.