போலீஸ் தாக்குதலில் தந்தை, மகன் உயிரிழப்பு: வலுக்கும் கண்டனங்கள்!
Chennai: தூத்துக்குடியில் போலீஸ் காவலில் இருந்த தந்தை, மகன் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது இந்த விவகாரம் முக்கிய அரசியல் பிரச்னையாகவும், சட்ட சீர்தருத்தம் கோரும் அளவும் உருவெடுத்துள்ளது.
இதுதொடர்பாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காவல்துறையினர் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ள ஆளும் அதிமுக அரசு அனுமதி அளித்துள்ளதாக கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து, உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குவதகாவும் அறிவித்துள்ளார்.
ஊரடங்கு நேரத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசு, காவல்துறையினர் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. அதுவே தந்தை, மகன் உயிரிழப்புக்கு காரணம் என அதிமுக அரசை விமர்சித்துள்ளார்.
ஊரடங்கு சமயத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி தங்களது மொபைல் கடையை திறந்த வைத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஜெயராஜூம் அவரது மகன் பென்னிக்ஸூம் 4 நாட்கள் கழித்து மருத்துவமனையில் வைத்து உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அவர்களது உறவினர்கள் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைத்து காவலர்களால் அவர்கள் இருவரும் கொடூரமாக தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
இருவரது உடலிலும், ஆசனவாயில் காயங்கள் இருந்ததாகவும், மார்பில் இருந்து முடியை பிடுங்கி சித்தரவதை செய்துள்ளதாகவும், அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்குபதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து, துணை காவல் ஆய்வாளர் உட்பட நான்கு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காவல் ஆய்வாளர் ஒருவர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, முதல்வர் எடப்பாடி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். எனினும், காவல்துறை துன்புறுத்தல் குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்குவதாக அறிவித்துள்ளார். எனினும், இந்த வழக்கை மதுரைக்கிளை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுள்ளது.
இந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு பொறுப்பான அனைவரும் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்றும், அதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும் திமுக துணை நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக திமுக எம்.பி கனிமொழி தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கும் கடிதம் எழுதியுள்ளார்.
தொடர்ந்து, ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், காவல்துறையினர் மிருகத்தனமாக நடந்து கொள்வது கொடூரமான குற்றம். நம்மை பாதுகாப்பவர்களே ஒடுக்குமுறையில் ஈடுபடுவது பெரும் துயரம். பாதிக்கப்பட்டகுடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.