மூலப்பொருள் இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளதால் விலை குறைய வாய்ப்புள்ளது.
LED/ LCD TV எல்.இ.டி., எல்.சி.டி. டிவிக்களை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களுக்கு 5 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதனை மத்திய அரசு இன்று ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் எல்.இ.டி., எல்.சி.டி., டிவிக்களின் விலை குறை வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக மத்திய நிதித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், '15.6 இன்ச் மற்றும் அதற்கு அதிகமான அளவு கொண்ட ஓபன் செல்கள் எல்.இ.டி., எல்.சி.டி. டிவிக்கள் தயாரிப்பதற்கு பயன்படுகின்றன. இதற்கு விதிக்கப்பட்டு வந்த 5 சதவீத இறக்குமதி வரி ரத்து செய்யப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று ஓபன் செல் டிவி பேனல்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் சிப், பிரின்ட்டட் சர்க்யூட் போர்டு உள்ளிட்டவற்றின் மீதான இறக்குமதி வரியையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
கடந்த 2017-ல் டிவி தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் சிலவற்றுக்கு 5 சதவீத இறக்குமதி வரியை மத்திய அரசு விதித்திருந்தது. இதையடுத்து அவற்றின் விலை கணிசமாக உயர்ந்தது.
இதற்கு டிவி தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் இந்த வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தன. இந்த நிலையில் மத்திய அரசு இறக்குமதி வரி விதிப்பை ரத்து செய்திருக்கிறது.
டிவி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஓபன் செல் பேனலின் விலை, டிவியின் மொத்த விலையில் பாதிக்கும் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.