"எங்கள் ஊழியர்கள் தொடர்ந்து வீட்டிலிருந்தபடியே பணி செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதை நாங்கள் மகிழ்ச்சியோடு வரவேற்போம்."
New York, United States: கொரோனா வைரஸ் பரவல் என்பது தினம் தினம் தீவிரமடைந்து வரும் நிலையில், ட்விட்டர் நிறுவனம், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு முன்னர் தனது அலுவலகங்களைத் திறக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் ஊரடங்கு முடிந்த பின்னரும் தங்களின் ஊழியர்கள் தொடர்ந்து வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்ட ட்விட்டர், கடந்த மார்ச் மாதம் முதலே Work From Home நடவடிக்கையைப் பின்பற்ற ஆரம்பித்தது. கொரோனா வைரஸால் ஏற்பட்ட சுகாதார நெருக்கடியை சமாளிக்க இந்தத் திட்டத்தை வெகு விரைவாக கையிலெடுத்ததாக ட்விட்டர் நிறுவனம் கூறுகிறது.
இது குறித்து ட்விட்டர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், “மையமாக்கப்படாத அதிகாரத்தை நோக்கி நாங்கள் நகர்ந்து கொண்டிருக்கிறோம். இதனால் எங்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே திறம்பட பணி செய்ய முடியும். எங்கள் நிறுவனத்திற்கு இருக்கும் தன்மையால் எங்கிருந்தபடியும் ஒருவரால் பணி செய்ய முடியும் என்கிற சூழல் உள்ளது.
கடந்த சில மாதங்களில் இதை நாங்கள் நிரூபித்துள்ளோம். எனவே எங்கள் ஊழியர்கள் தொடர்ந்து வீட்டிலிருந்தபடியே பணி செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதை நாங்கள் மகிழ்ச்சியோடு வரவேற்போம். அதை சாத்தியப்படுத்தியும் காட்டுவோம்,” என்று கூறினார்.
மேலும் ட்விட்டர் அலுவலகங்கள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது குறித்துப் பேசிய அவர், “மிகவும் கவனத்துடனும் தீவிர ஆய்வுக்குப் பின்னரும் ஒவ்வொரு அலுவலகமாகத்தான் நாங்கள் திறப்போம்.
அலுவலகங்களைத் திறப்பது என்பது முற்றிலும் எங்கள் முடிவாக இருக்கும். ஆனால், எப்போது அலுவலகங்கள் வர வேண்டும் என்பது எங்களின் ஊழியர்களின் முடிவாகத்தான் இருக்கும்.
எப்படிப் பார்த்தாலும் செப்டம்பர் மாதத்திற்கு முன்னர் எங்களின் அலுவலகங்கள் திறக்கப்படாது,” எனக் கூறியுள்ளார்.
கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள், இந்த ஆண்டு முழுமைக்கும் வீட்டிலிருந்தபடியே தங்களின் பெரும்பான்மையான ஊழியர்கள் பணி செய்ய கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தன. இப்படிப்பட்ட சூழலில்தான் ட்விட்டரும் ‘நிரந்தரமாக வீட்டிலிருந்தபடியே பணி' என்கிற முடிவு குறித்து பேச ஆரம்பித்துள்ளது.