This Article is From Jul 19, 2019

பீகாரில் கால்நடை திருடர்கள் என்ற சந்தேகத்தில் மூவர் அடித்துக்கொலை!

மூன்று பேரையும் உள்ளூர் கிராம மக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அடித்துக்கொல்லப்பட்ட மூவரின் உடல்களும் உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Patna:

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் கால்நடை திருடர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 3 பேர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சரனில் உள்ள பனியாபூர் கிராமத்தில் கால்நடைகளுடன் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் மினி வேன் ஒன்று சென்றுள்ளது. கால்நடைகளுடன் அந்த மினி வேன் செல்வதால், கால்நடை திருடர்கள் என சந்தேகமடைந்த உள்ளூர் வாசிகள் சிலர் அந்த வண்டியை மறித்துள்ளனர். 

பின்னர் மினி வேனில் இருந்த மூன்று பேரையும் கிராம மக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், அவர்கள் மூவரும் பலத்த காயமடைந்து நிலைகுலைந்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து, சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து அவர்கள் மூவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மூவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறும்போது, சமீப காலமாக கிராமத்தில் தொடர்ந்து கால்நடைகள் திருட்டு சம்பவம் நடந்து வந்ததால், கிராம வாசிகள் கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். 

இதனிடையே, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கிராம மக்கள் மீது புகார் அளித்துள்ளனர். அதேபோல், கால்நடைகளை திருடியதாக கிராம வாசிகளும் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொலைசெய்யப்பட்டுள்ள 3 பேர் மீதும் வேறு ஏதேனும் வழக்குகள் உள்ளதா, அவர்கள் இதற்கு முன்பு வேறு ஏதேனும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா என்பது உறுதிசெய்யப்படவில்லை. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

 

.