விசாகப்பட்டினத்தில் மீண்டும் அதிர்ச்சி!! வாயுக் கசிவால் 2 பேர் உயிரிழப்பு!
ஹைலைட்ஸ்
- விசாகப்பட்டினத்தில் மீண்டும் அதிர்ச்சி!! வாயுக் கசிவால் 2 பேர் உயிரிழப்பு
- மேலும், 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது. வாயுக் கசிவு வேறு எங்கும் பரவவில்லை.
Vishakhapatnam: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மருந்து நிறுவனம் ஒன்றில் நள்ளிரவு ஏற்பட வாயுக் கசிவால், 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி உதய் குமார் கூறும்போது, உயிரிழந்த 2 ஊழியர்களும் சேய்னர் லைஃப் சயின்ஸ் நிறுவன ஆலையில் வாயுக் கசிவு ஏற்பட்ட பகுதியில் பணிபுரிந்து வந்தவர்கள் ஆவார்கள். நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது. வாயுக் கசிவு வேறு எங்கும் பரவவில்லை.
தொழில்துறை துறைமுக நகரத்தின் பரவாடா பகுதியில் உள்ள மருந்து நிறுவனத்தில் இரவு 11.30 மணி அளவில் பென்ஸிமிடோஸோல் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த பகுதி முழுவதும் மூடப்பட்டது என்றார்.
இது சம்பவம் தொடர்பாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தகவல்கள் கோரியுள்ளதாக முதல்வர் அலுவலகம் தரப்பில் இன்று காலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மே மாதத்தில் விசாகப்பட்டினத்தில் உள்ள எல்ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷ வாயுக்கசிவால், 2 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், 40 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த ரசாயன ஆலையில் இருந்து டாக்சிக் ஸ்டைரீன் வாயு கசிந்தது. இதனால், சுற்றியுள்ள 3 கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று கதவுகளை உடைத்து மயக்கமடைந்தவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் 1984ல் நடந்த போபால் விஷவாயுக் கசிவு சம்பவத்துடன் பலரால் ஒப்பிடப்பட்டது. யூனியன் கார்பைடால் இயங்கும் பூச்சிகொல்லி ஆலையில் இருந்து விஷவாயுக் கசிந்து, வரலாற்றில் மிக மோசமான தொழிற்சாலை பேரழிவுகளில் ஒன்றாக உள்ளது. சுமார் 3,500 பேர் வரை அந்த விஷவாயுக் கசிவில் உயிரிழந்தனர். அரசு புள்ளி விவரங்கள் படி, குறைந்தது ஒரு லட்சம் பேர் வரை தொடர்ந்து நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டனர்.
(With inputs from ANI)