கோவா மாநிலத்தில் இருக்கும் 40 தொகுதிகளில், 14 பாஜக வசமும், 16 காங்கிரஸ் வசமும் இருக்கிறது
New Delhi: கோவா மாநிலத்தைச் சேர்ந்த 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் இன்று பாஜக தலைவர் அமித்ஷா-வை டெல்லியில் சந்தித்துள்ளனர். அமித்ஷா உடனான சந்திப்புக்குப் பிறகு இரண்டு எம்.எல்.ஏ-க்களும், பாஜக-வில் இணையப் போவதாக அறிவித்துள்ளனர்.
சட்டமன்ற உறுப்பினர்களான தயாநந்த் சோப்டே மற்றும் சுபாஷ் சிரோட்கர் ஆகிய இருவரும் நேற்று இரவு டெல்லிக்கு புறப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று அமித்ஷா-வைப் பார்த்து பேசும் வரை சந்திப்பு குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இருவரும் காங்கிரஸிலிருந்து பாஜக-வுக்கு மாற வாய்ப்புள்ளதாக சில நாட்களாக தகவல் கசிந்து வந்தது.
‘நாங்கள் இருவரும் இன்று பாஜக-வில் இணைகிறோம். இன்னும் 2 அல்லது 3 எம்.எல்.ஏ-க்கள் பாஜக-வில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அவர்கள் இன்றே இணைவார்கள் என்று சொல்ல முடியாது. வரும் நாட்களில் இணைய வாய்ப்புள்ளது’ என்று சுபாஷ் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோவா மாநிலத்தில் இருக்கும் 40 தொகுதிகளில், 14 பாஜக வசமும், 16 காங்கிரஸ் வசமும் இருக்கிறது. பாஜக, சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்ததன் மூலம் ஆட்சியில் இருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு உடல் நலம் குன்றியது. இதையடுத்து காங்கிரஸ் தரப்பு, பாஜக-வை ஆட்சியிலிருந்து விலகச் சொல்லியது. இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில் தான், காங்கிரஸைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ-க்கள் பாஜக-வில் இணைய உள்ளனர்.
நேற்றிரவு கோவாவில் செய்தியாளர்களைச் சந்தித்த தயாநந்த், ‘நான் டெல்லிக்கு தொழில் விஷயமாக செல்கிறேன்’ என்றார். ஆனால், இன்று அதற்கு முற்றிலும் வேறொரு விஷயத்தை செய்துள்ளார்.