புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Panaji: அரசு இணைய தளத்தின் முகவரியை க்ளிக் செய்தபோது, அவை ஆபாச இணைய தளங்களுக்கு சென்றுள்ளன. பொதுமக்களையும், மாணவர்களையும் அதிர்ச்சியடைய வைத்த இந்த சம்பவம் கோவாவில் நடந்துள்ளது.
கோவா மாநிலத்தில் அரசு இணைய தளங்கள் மூலமாக மக்களுக்கு பல்வேறு தகவல்கள் அளிக்கப்படுகின்றன. மாநிலத்தின் கல்வித்துறை மற்றும் அலுவலக மொழித்துறைக்கென தனித்தனி இணைய தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்த இரு இணைய தள முகவரிக்கு சென்றால் அவை, நேராக ஆபாச இணைய தளங்களுக்கு சென்றுள்ளன.
இதனால், கல்வித்துறை இணைய தள முகவரியை பயன்படுத்திய பொதுமக்களும் மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பான செய்திகள் வாட்ஸப் (whatsApp) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது.
இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, கல்வித்துறை மற்றும் அலுவலக மொழித்துறை இணைய தளங்கள் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளன.