பலத்த பாதுகாப்பு நிறைந்த இடத்தில் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது.
ஹைலைட்ஸ்
- கராச்சி நகரில் பங்கு வர்த்தக அலுவலகத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல்
- பாதுகாப்பு வீரர்கள் உள்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர்
- பாதுகாப்பு நிறைந்த பகுதியில் ஏற்பட்ட தாக்குதலால் பதற்றம் நீடிக்கிறது
Karachi: பாகிஸ்தானில் கராச்சி பங்கு வர்த்தக அலுவலகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் முக்கிய நகரமான கராச்சியில் பங்கு வர்த்தக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் பல முக்கிய தனியார் வங்கிகள் செயல்படுவதுடன், உயர் அதிகாரிகளும் தங்கியுள்ளனர். இதனால் இங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இங்கு சில்வர் வண்ண காரில் வந்த 4 தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதற்கு பாதுகாப்பு படை தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அவர்களை தவிர்த்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 4 பேர், போலீஸ்காரர், பொதுமக்கள் ஒருவர் என மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர்.
தீவிரவாதிகளிடம் இருந்து, ஆட்டோமேடிக் துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு எந்த தீவிரவாத இயக்கமும் இதுவரையில் பொறுப்பு ஏற்கவில்லை. தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், கூடுதல் பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் பங்கு வர்த்தக அலுவலகம் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளது.
நடந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை வெளியிடப்படும் என்றும் பங்கு வர்த்தக அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாத தாக்குதலுக்கு சிந்து மாகாண கவர்னர் இம்ரான் இஸ்மாயில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். எந்த விலை கொடுத்தாலும் சிந்து மாகாணத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் கவர்னர் கூறியிருக்கிறார்.
குற்றச் செயல்கள், அரசியல் ரீதியிலான வன்முறைகள் உள்ளிட்டவற்றுக்கு கராச்சி நகர் பெயர் போனதாக உள்ளது. இங்கு அரசியல் கட்சிகளின் ஆதரவு பெற்ற ஆயுத குழுக்கள் எதிர்த் தரப்பினர் மீது தாக்குதல் நடத்துவதாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு படையினர், ஆயுத குழுக்கள் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் முன்பை விட தற்போது நிலைமை சற்று முன்னேற்றம் கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.