Read in English
This Article is From May 26, 2020

கூட்டணி அரசில் குழப்பம்… மகாராஷ்டிர அரசியலில் பதற்றம்… பவாரின் 2 சந்திப்புகளும் பின்னணியும்!!

பவார், ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்தபோது அவருடன் தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த பிரஃபுல் படேலும் உடனிருந்தார்.

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • நேற்று மாலை உத்தவ் தாக்கரவை நேரில் சந்தித்தார் பவார்
  • தாக்கரேவின் சந்திப்பைத் தொடர்ந்து ஆளுநரையும் சந்தித்துள்ளார் பவார்
  • சிவசேனா, இவ்விவகாரத்தில் பாஜகவை சாடி வருகிறது
Mumbai:

மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி அரியணையில் உள்ளது. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே மாநிலத்தின் முதல்வராக உள்ளார். இந்நிலையில் தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத் பவாரின் அடுத்தடுத்த இரண்டு சந்திப்புகள், மகாராஷ்டிர அரசியல் வட்டாரத்தைப் பரபரக்கச் செய்துள்ளது. 

79 வயதாகும் மகாராஷ்டிராவின் மூத்த அரசியல்வாதியான சரத் பவார், நேற்று மும்பையில் இருக்கும் உத்தவ் தாக்கரே வீட்டிற்கு நேரில் சென்று அவரை சந்தித்துள்ளார். அதைத் தொடர்ந்து இன்று மகாராஷ்டிர ஆளுநரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் பவார். இந்த இரண்டு சந்திப்புகளின் பின்னணியும் தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா இடையிலான மோதல் போக்கின் வெளிப்பாடே என்று தகவல் ஒரு பக்கம் உலவிக் கொண்டிருக்கிறது. 

இந்தியாவிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது மகாராஷ்டிராதான். இந்த நெருக்கடியால் தேசியவாத காங்கிரஸுக்கும் சிவசேனாவுக்கும் இடையில் பல்வேறு விஷயங்களில் மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. 

Advertisement

குறிப்பாக சரத் பவார், கொரோனா வைரஸ் தொற்றால் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கக் கூடாது என்றும், பொருளாதார நடவடிக்கைகளுக்கு தளர்வு அளிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் முதல்வர் உத்தவ் தாக்கரே, தொடர்ந்து முழு முடக்க நடவடிக்கையில் தளர்வு இருக்கக் கூடாது என்று நினைக்கிறார். இதனால் இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

ஆளுநர் உடனான சந்திப்பை அடுத்து சரத் பவார், “ஆளுநரை சந்தித்தது சாதாரணமாகத்தான். மகாராஷ்டிர அரசுக்கு எந்த வித நெருக்கடியும் இல்லை. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எங்களுடன்தான் உள்ளனர். பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் பொறுமை இழந்து வருகிறார்,” என்று குத்தலாக பாஜகவை சாடி கருத்து தெரிவித்தார். 
 

ஆளுநருடன் கோஷ்யாரியுடன் சரத் பவார் மற்றும் பிரஃபுல் படேல்.

சிவசேனா தரப்பும் இந்த விவகாரம் பற்றி கருத்து தெரிவித்துள்ளது. அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான சஞ்சய் ராவத், “சரத் பவாரும் உத்தவ் தாக்கரேவும் சுமார் ஒன்றரை மணி நேரங்களுக்குப் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர். யாராவது மகாராஷ்டிர அரசு ஸ்திரமாக இல்லை என்று வதந்தி பரப்பினால் அது அவர்களின் வயிற்றெரிச்சலாகவே இருக்கும். அரசு மிக வலுவாக உள்ளது. கவலை வேண்டாம். ஜெய் மகாராஷ்டிரா!!” என்று ட்விட்டர் மூலம் கருத்திட்டுள்ளார். 

Advertisement

பவார், ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்தபோது அவருடன் தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த பிரஃபுல் படேலும் உடனிருந்தார். அவர், “எங்களை தேனீர் பருக அழைத்திருந்தார் ஆளுநர். அதனால் மரியாதை நிமித்தமாக அவரைப் பார்க்க வந்தோம். இந்த சந்திப்பில் எந்தவித அரசியலும் இல்லை,” என்று கூறினார். 

சமீப நாட்களாக மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும் மகாராஷ்டிர அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த சிறப்பு ரயில்களில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக சிவசேனா தரப்பு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அதற்கு பாஜகவும் எதிர்வினையாற்றி வருகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் தரப்பு அமைதி காத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

அதேபோல மகாராஷ்டிர அரசு, கொரோனா வைரஸ் தொற்றை திறம்பட கையாளவில்லை என்று மாநில பாஜக குற்றம் சாட்டி வருகிறது. மாநில அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களையும் ஒருங்கிணைத்து வருகிறது. பாஜக தரப்பு, மகாராஷ்டிர அரசைக் கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல் செய்ய வேண்டும் என்றும் ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளது. 


 

Advertisement