கழகங்களை அகற்றுவோம். தமிழக வருமானத்தைக் கூட்டுவோம் - கமல்ஹாசன்
மாறி மாறி சுரண்டி வரும் இரு கழகங்களே தமிழகத்தின் கடன் சுமைக்கு முக்கிய காரணம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில், 2020-21-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அகழ்வைப்பகம், அயலகத் தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் பெயரில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஒப்பிலக்கண ஆய்வு இருக்கை அமைத்தல், பணிபுரியும் பெண்களுக்கு 13 இடங்களில் அரசு விடுதிகள், கடலூரில் அரசு மருத்துவக் கல்லூரி போன்ற வரவேற்கத்தக்க அறிவிப்புகள் இருந்தாலும், இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசின் கடன் சுமை ரூபாய் 4 லட்சத்து 56 ஆயிரத்து 660 கோடி அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது.
2011 ஆம் ஆண்டில் அதிமுக அரசு பொறுப்பேற்ற போது, ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 610 கோடியாக இருந்த தமிழகத்தின் கடன் சுமை, தற்போது 4 லட்சத்து 56 ஆயிரத்து 660 கோடி அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் இந்த கடன் சுமை பெரும் கவலை அளிப்பதாக பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, தமிழகத்தின் ஆண், பெண் குழந்தைகள் மற்றும் இனி பிறக்கவிருக்கும் பிள்ளைகள் என ஒவ்வொருவரின் தலையிலும் சுமார் ரூ.57,000/ரூபாய் கடன் சுமை, இன்றைய தேதி வரை ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது.
இதன் முக்கிய காரணங்கள், மாறி மாறி சுரண்டி வரும் இரு கழகங்களே. இவர்களை அகற்றுவோம். தமிழக வருமானத்தைக் கூட்டுவோம். கடனில்லாத் தமிழகத்தை உருவாக்குவோம். மக்கள் கைகோர்த்தால் நீதி கிடைக்கும் என்று அதில் தெரிவித்துள்ளார்.