ஹைலைட்ஸ்
- மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது
- பாதிக்கப்பட்ட 2 பேரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்
- ஒருவர் இத்தாலியிலிருந்தும், இன்னொருவர் துபாயிலிருந்தும் வந்துள்ளனர்
New Delhi: டெல்லி மற்றும் தெலங்கானாவில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 5-யை எட்டியுள்ளது.
டெல்லியில் பாதிக்கப்பட்டவர் இத்தாலியிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ளார். தெலங்கானாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர், துபாயிலிருந்து இந்தியாவுக்கு வந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முதன்முறையாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு கேரள மாநிலத்தில் உறுதி செய்யப்பட்டது. தற்போது பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் 2 பேரின் நிலைமையும் சீராக உள்ளது என்றும், இருவரும் மருத்துவர்களால் நன்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 3 மாணவர்களும், பாதிப்பு நீங்கிய பின்னர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
சீனாவிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டவர்கள் கட்டாய மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். சில வாரங்களில் அவர்களுக்குப் பாதிப்பு இல்லையென்பது உறுதி செய்யப்பட்ட பின்னர், அவர்கள் தங்களது வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
உலக அளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் சீனாவைச் சேர்ந்தவர்கள். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் 2-வது நாடு அமெரிக்கா.