Kannauj (Uttar Pradesh): உத்திரப்பிரதேச மாநிலம் கன்னூஜ் பகுதியைச் சேர்ந்தவர்கள், அரவிந்த் பன்ஜாரா - சுக்தேவி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், மூன்றாவது முறையாக சுக்தேவி கர்பமானார். 7வது மாதத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். அப்போது, அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், சுக்தேவியின் உயிரை காப்பாற்ற இரத்தம் தேவைப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால், மனைவியின் மருத்துவ சிகிச்சைக்கு பணம் புரட்டுவதில் அரவிந்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், வேறு வழியின்றி தனது முதல் குழந்தையை 25,000 ரூபாய்க்கு விற்க முடிவு செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், குழந்தையை விற்க முயன்ற நபரை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும், கர்ப்பிணி பெண்ணின் மருத்துவ செலவை தாங்களே ஏற்றுக் கொள்வதாக திர்வா காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால், திர்வா பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.