New Delhi: கேரள வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் நிதி தருவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை என அந்நாடு தெரிவித்துள்ளது. மேலும், எந்த தொகையையும் நிதி உதவியாக வழங்க தாங்கள் முடிவு செய்யவில்லை என்றும் அந்நாடு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி சரியாக சென்று சேர, குழு ஒன்றை அமைத்ததாக மட்டுமே தங்கள் நாடு ஒரு வாரத்துக்கு முன் அறிவித்ததாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்திய தூதர் அஹமத் அல்பனா தெரிவித்துள்ளார்.
“கேரளாவுக்கு உதவ தேசிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு இந்திய அரசு மற்றும் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி சென்று சேருவதை உறுதி செய்யும்” என்று மட்டும் தெரிவித்தார் அல்பனா.
“நிதி உதவி அளிக்கப்படும் தொகை பற்றி எந்த அறிவிப்பையும் இது வரை ஐக்கிய அரபு அமீரகம் வெளியிடவில்லை. இந்திய வெளியுறவு அமைச்சகத்துடன், எங்கள் அரசு இது பற்றி எதுவும் பேசவில்லை” என்றும் அல்பனா கூறுகிறார்.
மத்திய அரசும், எந்த நாட்டிடம் இருந்தும் கேரளாவுக்கு உதவி செய்வதாக இது வரை தகவல் இல்லை என்று கூறுகிறது. ஆனால், ஆகஸ்ட் 21-ம் தேதி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் “ ஐக்கிய அரபு அமீரகம் கேரளாவுக்கு 700 கோடி ரூபாய் நிதி உதவி வழங்க இருக்கிறது. வெளிநாட்டில் மலையாள மக்களுக்கு இருக்கும் இன்னொரு வீடு ஐக்கிய அரபு அமீரகம். அவர்களின் ஆதரவுக்கு நன்றி” என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அந்த 700 கோடி ரூபாயை ஏற்க முடியாது என்று மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததால், கேரள அரசு, மத்திய அரசை சாடி வருகிறது. நிவராணத்துக்கு போதிய நிதி கொடுக்கவும் மறுக்கிறது, கிடைப்பதையும் ஏற்க மறுக்கிறது மத்திய அரசு என்று அதிருப்தி தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.