This Article is From Nov 13, 2019

மகாராஷ்டிராவில் சிவசேனா-காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு! நல்ல செய்தி வரும் என உத்தவ் பேட்டி

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அங்கு குடியரசு தலைவர் ஆட்சி நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சிவசேனா கவர்னர் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என குற்றம்சாட்டியது.

மகாராஷ்டிராவில் சிவசேனா-காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு! நல்ல செய்தி வரும் என உத்தவ் பேட்டி

குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில் சேனா - காங். தலைவர்கள் சந்திப்பு நடந்திருக்கிறது.

Mumbai:

மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக சிவசேனா - காங்கிரஸ் தலைவர்கள் இன்று சந்தித்து பேசியுள்ளனர். மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிர அரசியலில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டுள்ள சிவசேனா கட்சி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சி ஓகே சொல்லி விட்டதாக கூறப்படும் நிலையில், காங்கிரஸ் ஆதரவு கிடைக்காததால் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்தது.

எந்த கட்சியும் ஆட்சியமைக்க முன் வராத நிலையில், மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமலுக்கு கொண்டுவருமாறு மத்திய அரசுக்கு கவர்னர் பகத் சிங் கோஷியாரி பரிந்துரை செய்தார். 

இதையடுத்து மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி நேற்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கிடையே காங்கிரசின் ஆதரவை பெறும் முயற்சியில் சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே தீவிரம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில் உத்தவ் தாக்கரே காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்ர தலைவர்களான முன்னாள் முதல்வர் அசோக் சவான், மாணிக்க ராவ் தாக்கரே உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உத்தவ் தாக்கரே ,'எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தை சரியான திசையில் செல்கிறது. விரைவில் நல்ல செய்தியை சரியான நேரத்தில் அறிவிப்போம்' என்றார். 

காங்கிரஸ் தலைவர்கள் இந்த சந்திப்பு குறித்து கூறுகையில், 'உத்தவ் தாக்கரே உடனான சந்திப்பு என்பது மரியாதை நிமித்தமானது. ஆக்கப் பூர்வமான முறையில் இந்த சந்திப்பு அமைந்துள்ளது' என்றனர். 

288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பாஜக 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. ஆட்சியமைக்க 145 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிலையில், தேசியவாத காங்கிரசின் 54, காங்கிரசின் 44 உறுப்பினர்கள் ஆதரவுடன் மொத்தம் 154 உறுப்பினர்கள் பலத்துடன் ஆட்சியமைக்க சிவசனோ தீவிரம் காட்டி வருகிறது. 

.