தேர்தலுக்கு முன்பே பாஜக - சிவசேனா இடையே நிறைய உரசல்கள் இருந்தன.
Mumbai: மகாராஷ்டிராவில் (Maharashtra) கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்த பாஜக (BJP), சிவசேனா (Shiv Sena) கட்சிகளுக்கு இடையில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதில் தொடர்ச்சியாக சிக்கல் நீடித்து வருகிறது. இந்த காரணத்தினால், மகாராஷ்டிராவில் யாரும் ஆட்சியமைக்க முடியாத நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் பாஜக - சிவசேனாவுக்கு எதிராக தேர்தல் களம் கண்ட தேசியவாத காங்கிரஸ் (NCP), புதிய ட்விஸ்ட் ஒன்றைக் கொடுத்துள்ளது. அதாவது சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே (Uddhav Thackeray), தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருடன் (Sharad Pawar) தொலைபேசியில் உரையாடியுள்ளதாக தகவல் வந்துள்ளது. இத்தகவல், மகாராஷ்டிர தேர்தல் களத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய அரசியல் வட்டாரத்தையே பரபரக்கச் செய்துள்ளது.
தாக்கரே - பவார் உரையாடல் நடந்துள்ளதால், பவார், டெல்லிக்கு வந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலை காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி வைத்து எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை, பாஜக, தனிப் பெரும் கட்சியாக தேர்தலில் உருவெடுத்திருந்தாலும், தனிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. பாஜக ஆட்சியமைக்க சிவசேனாவின் ஆதரவு தேவைப்படுகிறது. இதனால் சிவசேனா, ஆட்சியில் சரிபாதி பங்கு வேண்டும் என்ற கறார் கோரிக்கையை வைத்துள்ளது. இந்த கோரிக்கைதான் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிப்பதற்குக் காரணம்.
சிவசேனாவின் முக்கியப் புள்ளியான சஞ்சய் ராவத், சரத் பவாரை நேற்று நேரில் சென்று சந்தித்தது, இரு கட்சிகளிடையே அதிகார உடன்படிக்கை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படும் செய்திகளுக்கும் மேலும் வலு சேர்த்தது.
“சிவசேனா முடிவு செய்தால், நிலையான அரசமைக்க அதனால் முடியும். மகாராஷ்டிரா மக்கள், 50: 50 ஃபார்முலாபடி ஆட்சியமைக்க வேண்டும் என்று தேர்தல் முடிவுகள் மூலம் உணர்த்தியுள்ளார்கள்,” என்று கூறியுள்ளார் ராவத். மேலும் அவர் பெயர் குறிப்பிடாமல் பாஜக-வை, “அகம்பாவத்தில் ஆட வேண்டாம் சார்… பல அலக்சாண்டர்கள் காலத்தின் ஓட்டத்தில் மறைந்து போயுள்ளார்கள்…”, என்று சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 இடங்களில், பாஜக 105 தொகுதிகளைக் கைப்பற்றியது. சிவசேனா, 56 இடங்களைப் பிடித்தது. இருவரும் கூட்டணி அமைத்தால் சுலபமாக மெஜாரிட்டி கிடைத்துவிடும். சேனாவைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ், 54 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் 44 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
தேர்தலுக்கு முன்பே பாஜக - சிவசேனா இடையே நிறைய உரசல்கள் இருந்தன. தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே, அதிகாரப் பகிர்வில் 50:50 ஃபார்முலா அமலாக்கப்பட வேண்டும் என்று சொன்னதால், இருவருக்கும் இடையிலான பிளவு மேலும் அதிகரித்தது.
இந்த மொத்த விவகாரம் குறித்து சரத் பவார், “சிவசேனா, பாஜக-விடம் வைக்கும் கோரிக்கையில் எந்த தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை,” என்று ஆச்சரியப்படும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.