This Article is From Nov 22, 2019

'மகாராஷ்டிராவில் சிவசேனா - காங்கிரஸ் - என்.சி.பி. கூட்டணி ஆட்சி' - சரத்பவார் அறிவிப்பு!!

மகாராஷ்டிராவில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்டு வந்த எதிர்பார்ப்பு முடிவை எட்டியுள்ளது. ஆட்சியமைப்பதற்கு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளன.

மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது தொடர்பாக சரத்பவார் இன்று முக்கிய தகவலை வெளியிட்டார்.

Mumbai:

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் அரசு அமையும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். முதல்வராக உத்தவ் தாக்கரே பொறுப்பேற்பார் என்பதில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு கருத்து ஒற்றுமை ஏற்பட்டதை தொடர்ந்து, இந்த தகவலை சரத் பவார் வெளியிட்டுள்ளார். 

டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மும்பையில் இன்று இறுதிக் கட்ட ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் முதல்வர் யார் என்பது குறித்து கருத்து ஒற்றுமை ஏற்பட்டிருக்கிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு 5 ஆண்டுகளை நிவர்த்தி செய்யும் என்று தெரிவித்தார். 

ஆட்சியமைப்பதற்கான கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிர கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி தனது டெல்லி சுற்றுப் பயணத்தை ரத்து செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அவரை சந்தித்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள் எந்த நேரத்திலும் ஆட்சியமைக்க உரிமை கோரலாம் என் எதிர்பார்க்கப்படுகிறது. 

கூட்டணி தலைவர்கள் உடனான ஆலோசனையின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ஆலோசனை ஆக்கப்பூர்வமாகவும், பலன் அளிக்கும் வகையிலும் இருந்ததாக தெரிவித்தார். 

மகாராஷ்டிராவில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன்வராத காரணத்தினால், குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 தொகுதிகளிலும், சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களை கைப்பற்றியது. 

இதில், பெரும்பான்மை கொண்ட கட்சியான பாஜகவை முதலில் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். எனினும், அழைப்பை ஏற்க பாஜக மறுப்பு தெரிவித்தது. தொடர்ந்து, முதல்வர் பதவியையும் தேவேந்திர ஃபட்நாவிஸ் ராஜினாமா செய்தார். 


பாஜகவும் - சிவசேனாவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தாலும், அதிகாரப்பகிர்வு மோதல் காரணமாக ஆட்சி அமைக்க முடியவில்லை. மக்களவை தேர்தலுக்கு முன்பு பாஜக தலைவர் அமித் ஷா சிவசேனாவுடம் கொண்ட ஒப்பந்தத்தின் படி, 50:50 அதிகாரப்பகிர்வு, சுழற்சி முறையில் முதல்வர் பதவி உள்ளிட்ட அம்சங்களை சிவசேனா தொடர்ந்து வலியுறுத்தியது. 

எனினும், பாஜக இதனை ஏற்காமல் பிடிவாதமாக இருந்து வந்தது. மேலும், அதிக இடங்களை கைப்பற்றிய தங்கள் கட்சி எதற்காக சரிபாதியாக அதிகாரத்தை பகிர வேண்டும் என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி மறுப்பு தெரிவித்து வந்தது. 

இதைத்தொடர்ந்து, பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க திட்டமிட்டது. இதற்காக தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுடன் சிவசேனா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இதையடுத்து, சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான நிலைப்பாட்டில் காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சரத் பவார். 

.