This Article is From Nov 27, 2019

மகாராஷ்டிரா முதல்வராக பொறுப்பேற்கும் உத்தவ் தாக்கரே! தேர்தலில் ஒருமுறைகூட போட்டியிடாதவர்!!

மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து ஏற்பட்டிருக்கும் அரசியல் நிகழ்வுகள் தேசிய அளவில் பரபரப்பாக பேசப்படுகின்றன. இன்று திடீர் திருப்பமாக முதல்வர் தேவேந்திர பட்நாவீஸ், துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் ராஜினாமா செய்திருக்கிறார்கள்.

மகாராஷ்டிரா முதல்வராக பொறுப்பேற்கும் உத்தவ் தாக்கரே! தேர்தலில் ஒருமுறைகூட போட்டியிடாதவர்!!

முதல்வராக பொறுப்பேற்பதற்கு தயாராகிறார் உத்தவ் தாக்கரே.

New Delhi:

தன் வாழ்நாளில் தேர்தலையே சந்திக்காத சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே விரைவில் மகாராஷ்டிர முதல்வராக பொறுப்பேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஏதுவாக இன்று முதல்வர் தேவேந்திர பட்நாவீஸ், துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள். 

மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதற்கு 145 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், நேற்று மும்பையில் உள்ள கிராண்ட் ஹயாத் ஓட்டலில் சிவசேனா ஆதரவு எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மொத்தம் 158 பேர் கலந்து கொண்டார்கள். மேலும் 4 ஆதரவு எம்எல்ஏக்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் கலந்து கொள்ள இயலவில்லை.

இதற்கிடையே மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பு ஏற்றதை எதிர்த்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நாளை சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை நிறைவேற்றுமாறு கவர்னர் பகத் சிங் கோஷ்யாரிக்கு உத்தரவிட்டுள்ளது. 

இதில் சிவசேனா தரப்பு வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர முதல்வராக விரைவில் பொறுப்பு ஏற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சிவசேனா நிறுவனரான பால் தாக்கரே வாழ்நாளில் தேர்தலையே சந்திக்காதவர். இருப்பனும், மகாராஷ்டிர அரசியலில் மிக முக்கிய புள்ளியாக இருந்து வந்தார். தந்தையின் வழியைப் பின்பற்றி மகன் உத்தவும் அரசியலில் குதிக்காமல் இருந்தார். இருப்பினும், உத்தவின் மகனும், பால் தாக்கரேவின் பேரனுமான ஆதித்யா தாக்கரே, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஓர்லி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் வாழ்நாளில் தேர்தலையே சந்திக்காத உத்தவ், எடுத்ததுமே மாநில முதல்வராக பொறுப்பு ஏற்க உள்ளார். சுமார் 20 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் சிவசேனாவை சேர்ந்த ஒருவர் முதல்வராக தேர்வாகவிருக்கிறார். 
 

.