மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
Mumbai: மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக விவசாயிகள் 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட அரசியல் சிக்கல்கள், திருப்பங்களுக்கு பின்னர் மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை பிடிக்க உள்ளது. இதற்கான தடைகள் ஏறக்குறைய நீங்கியுள்ள நிலையில் நாளை மாநில முதல்வராக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்க உள்ளார்.
இதற்கான விழா மும்பை சிவாஜி பூங்காவில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க வருமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று காங்கிரஸ் ஆளும் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதில் சோனியா, ராகுல் காந்தி பங்கேற்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.
பதவியேற்பு விழாவில் குறிப்பிடத் தகுந்த வகையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை அதிகளவு நடந்து வரும் நிலையில், அவர்களின் நலனுக்கு சிவசேனா கூட்டணி அரசு உறுதுணையாக இருக்கும் என்பதை கூறும் விதமாக, இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று சிவசேனா மூத்த தலைவர் விநாயக் ராவத் தெரிவித்துள்ளார்.
நேற்று மகாராஷ்டிர முதல்வர் பதவியில் இருந்து பாஜகவின் தேவேந்திர பட்னாவீஸ், துணை முதல்வர் பொறுப்பிலிருந்து அஜித் பவார் ஆகியோர் ராஜினாமா செய்தனர். இதன் தொடர்ச்சியாக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் தலைவராக உத்தவ் தாக்கரே நேற்று ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.