Udhayanidhi trolls Rajini: “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகர். அவர் இன்னும் அரசியல் கட்சியே ஆரம்பிக்கவில்லை"
Udhayanidhi trolls Rajini: நடிகர் ரஜினிகாந்த், நேற்று சென்னை, போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து சிஏஏ- என்ஆர்சி - என்பிஆர் உள்ளிட்டவைகள் குறித்து தனது நிலைப்பாட்டினை தெரிவித்துள்ளார். குறிப்பாக அவர், ‘முஸ்லிம்களுக்கு இந்த சிஏஏ சட்டம் மூலம் பெரிய அச்சுறுத்தல் இருக்கிறதா பீதி கிளப்பிட்டாங்க. அது தவறு. முஸ்லிம்களுக்குப் பிரச்னைனா முதல் ஆளா குரல் கொடுப்பேன்' என்று பேசினார். இதற்கு திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினி, விரிவாக பேசியபோது, “என்பிஆர் ரொம்ப முக்கியம். 2010 ஆம் ஆண்டு காங்கிரஸும் செய்திருக்காங்க. 2020-லயும் எடுத்துதான் ஆகணும். இது மக்கள் தொகை. யார் வெளிநாட்டுக் காரங்க. யார் உள்நாட்டுக் காரங்கனு தெரிஞ்சாகணும். அது ரொம்ப அவசியம். என்சிஆர்-ஐப் பொறுத்தவரை மத்திய அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கல. இன்னும் யோசனதான் பண்ணிட்டு இருக்காங்க. அது பற்றி முழுசா தெரிஞ்ச பிறகுதான் என்னானு சொல்ல முடியும்.
சிஏஏ பற்றி அவங்க ரொம்ப தெளிவா சொல்லிட்டாங்க. இந்தியாவுல வாழுற மக்களுக்கு எந்த பிரச்னையும் கிடையாது. அவங்க குடியுரிமைக்கு எந்த பாதிப்பும் இருக்காதுனு சொல்லிட்டாங்க. மற்ற நாடுகளில இருந்து வரவங்களுக்கான ஒரு நடைமுறைதான் இது. முக்கியமா முஸ்லிம்களுக்கு இந்த சட்டம் மூலம் பெரிய அச்சுறுத்தல் இருக்கிறதா பீதி கிளப்பிட்டாங்க. இஸ்லாம் மதத்திற்கு எந்த அளவுக்கு இங்க உரிமை இருக்குனா, பிரிவினை போது அங்க போகாம இங்கயே இருந்தாங்க. வாழ்ந்தாலும் செத்தாலும் இதுதான் என் பூமி வாழுறாங்க. அவங்கள எப்டி வந்து வெளிய அனுப்புறது.
அந்த மாதிரி எதாவது முஸ்லிம்களுக்கு பாதிப்பு வந்தா, ரஜினிகாந்த் முதல் ஆளா குரல் கொடுப்பான். ஆனா, சில அரசியல் கட்சிகள் அவங்க சொந்த லாபத்துக்காக தூண்டி விடுறாங்க. மத குருகளும் இதுக்குத் துணை போறாங்க. இது ரொம்ப தவறான விஷயம்” என்று விளக்கினார்.
இந்நிலையில், சிஏஏ-வுக்கு எதிராக தமிழக அளவில் திமுக கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னை, லயோலா கல்லூரியில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், திமுக, கையெழுத்து இயக்கத்தை செயல்படுத்தியது. அப்போது செய்தியாளர்கள் உதயநிதியிடம், “சிஏஏ குறித்த பீதியை அரசியல் கட்சிகள்தான் கிளப்புகின்றன. சிஏஏ-வால் மக்களுக்கு பாதிப்பில்லை என்று ரஜினி சொல்லியிருக்கிறாரே?” என்று கேட்டதற்கு, “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகர். அவர் இன்னும் அரசியல் கட்சியே ஆரம்பிக்கவில்லை. அவரது கொள்கைகள் கூட என்னவென்று தெரியவில்லை. அப்படி இருக்கையில் நான் அவரது கருத்துக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. முதலில் அவர் கட்சி ஆரம்பிக்கட்டும், பிறகு பேசுகிறேன்,” என்று நெத்தியடியாக பதில் அளித்தார்.