வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூரில் தேர்தல் நடக்க இருக்கிறது.
திமுக-வின் இளைஞர் அணிச் செயலாளராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், வேலூர் நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து இரண்டாவது நாளாக கழக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அவர் பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தின்போது உதயநிதி, “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-வுக்கு மிகப் பெரிய வெற்றியைத் தந்த தமிழக மக்களுக்கு நன்றி. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு மாபெரும் வெற்றியைத் தந்ததற்கு மிக்க நன்றி. மக்களவைத் தேர்தலின்போது தமிழகம் முழுக்க நான் திமுக சார்பில் பிரசாரம் செய்தேன். அப்போது வேலூர் தொகுதியில் இருந்துதான் நான் முதன்முதலாக பிரசாரத்தைத் தொடங்கினேன். இப்போது கட்சியின் இளைஞரணிச் செயலாளராக பதவியேற்ற பின்னர் நான் பங்கேற்கும் முதல் பிரசாரக் கூட்டமும் இதுவே.
டி.எம்.கே என்றால் திராவிட முன்னேற்றக் கழகம். டி.எம்.கே என்றால் துரை முருகன் கதிர்ஆனந்த் என்றும் கூறலாம். அவரை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று வாக்கு சேகரித்தார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது வேலூர் தொகுதியின் தேர்தல் மட்டும்தான் ரத்து செய்யப்பட்டது. வேலூரில் உள்ள திமுக பிரமுகர் வீட்டில் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்துதான் அத்தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
திமுக, அதிமுக சார்பில் தேர்தல் ரத்துக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களான கதிர் ஆனந்த் மற்றும் ஏ.சி.சண்முகம் ஆகியோரே மீண்டும் போட்டியிட உள்ளனர். வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூரில் தேர்தல் நடக்க இருக்கிறது.