This Article is From Sep 07, 2018

தொண்டர்களிடம் மன்னிப்புக் கேட்ட உதயநிதி ஸ்டாலின்!

திமுக தொண்டர்கள் பலரும் மிகப்பெரும் ஆளுமை கொண்ட தலைவர்கள் உள்ள பேனரில் உங்கள் படம் இடம்பெற்றிருப்பது உங்களுக்கு அருவருப்பாகத் தோணவில்லையா? எனக் கேட்டுள்ளனர்

தொண்டர்களிடம் மன்னிப்புக் கேட்ட உதயநிதி ஸ்டாலின்!

சமீப காலமாக திமுக-வின் பிரச்சாரக் கூட்டங்கள், போராட்டங்கள் என அனைத்திலும் முன்னதாக நின்று பங்கெடுத்து வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலினின் மகனும் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.

இதையொட்டி கட்சியின் முக்கிய விழாக்களில் உதயநிதி ஸ்டாலின் பங்கெடுப்பதும் அவரை வாழ்த்தி பேனர்களும் போஸ்டர்களும் வைக்கப்பட்டு வருவது வழக்கமாகி உள்ளது. இது எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்றால், கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் உதயநிதி சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் இருக்கும் அளவில் உள்ளது. உதயநிதி கட்சி விவகாரங்களில் காட்டும் அக்கறையைப் பார்த்த சிலர் உதயநிதி விரைவில் தீவிர அரசியலில் ஈடுபடலாம் எனக் கூறி வந்தனர்.

உதயநிதியின் அரசியில் பிரவேசத்துக்கு கட்சியில் மூத்த உறுப்பினர்களில் இருந்து அடிமட்ட தொண்டன் வரையில் பலர் ஆதரவும் பலர் எதிர்ப்பும் காட்டி வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் தஞ்சையில் நடந்த திமுக கூட்டம் ஒன்றில் வைக்கப்பட்ட முக்கிய பேனர் ஒன்றில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, தற்போதைய தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தன.

இதுதான் தற்போதைய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. திமுக தொண்டர்கள் பலரும் உதயநிதியின் புகைப்படம் பேனரில் இடம்பெற்றிருந்தது குறித்து சமூக வலைதளங்களில் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். மிகப்பெரும் ஆளுமை கொண்ட தலைவர்கள் உள்ள பேனரில் உங்கள் படம் இடம்பெற்றிருப்பது உங்களுக்கு அருவருப்பாகத் தோணவில்லையா? எனக் கேட்டுள்ளனர். இதையடுத்து “தவறு! மீண்டும் நடக்காது” என தொண்டர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

.