"தலைவரும் தளபதியையும் போல இருங்கள்"
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜாவின் மகன் திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது. இதில் திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் மணமக்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில், “இன்று இணைந்திருக்கும் இருவருக்கும் நான் சொல்ல விரும்புவது கலைஞரும் - தமிழையும் போல பற்றோடு இருங்கள். இன்னொன்றையும் சொல்லலாம். தலைவரும் தளபதியையும் போல இருங்கள். யாரை மாதிரி இருக்கக் கூடாது என்றும் சொல்கிறேன். இப்போது ஆட்சியில் உள்ள மாநில - மத்திய அரசுகள் போல இருக்காதீர்கள். அடிமைத்தனமாக சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். இருவரும் பரஸ்பரம் தங்களது உரிமைகளைக் கேட்டுப் பெறுங்கள்,” என்று பலத்த கரகோஷங்களுக்கு இடையில் பேசினார்.
முன்னதாக பேசிய ஸ்டாலின், “மணமகன், மணமகள் இருவரும் வீட்டில், மத்திய - மாநில அரசு போன்று அமைதியாக இருக்கக் கூடாது. கேள்வி கேட்க வேண்டும். குடியுரிமைச் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு அளித்த ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் தற்போது அதை எதிர்ப்பதாகவும், பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் நிதிஷ்குமாரே குடியுரிமைச் சட்ட திருத்தத்தை எதிர்ப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
சிஏஏ-வை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினால் நானே இவர்களை பாராட்டுவேன். தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவதற்காக விருது பெற்றுள்ளதாக முதலமைச்சர் கூறி வருகிறார். முதலில் தமிழகத்துக்கு விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும்,” என்று அரசியல் கலந்தே பேசினார்.