பல்கலைக் கழக துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
New Delhi: தேர்வில் மாணவர்கள் காப்பியடித்து முறைகேடு செய்வதை தடுக்க டெக்னாலஜியை கையில் எடுக்குமாறு பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளுக்கு UGC எனப்படும் பல்கலைக் கழக மானிய கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
பல்கலைக் கழக மானிய கமிஷன் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் செயல்பட்டு வரும் அரசுப் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளுக்கு போதியை நிதியை ஒதுக்கீடு செய்வதும், நிர்வகிப்பதும் UGC –ன் முக்கிய பணிகளாகும்.
இந்த நிலையில், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்கள் சிலர் தேர்வில் முறைகேடு செய்யும் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர UGC திட்டமிட்டுள்ளது. இதன்படி, பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்கலைக் கழக துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது-
பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் தேர்வு நடத்தப்படுவதற்கு முன்பாக தேர்வு மையங்களில் செல்போன் செயல்பாட்டை தடுக்கும் ஜாம்மர் (Jammer) கருவிகள் பொருத்தப்பட வேண்டும். இவை குறைந்த செயல்திறன் கொண்டவையாக இருக்க வேண்டும்.
இந்த வகைக்காக EC-CRJ-6B5 மாடல் ஜாம்மர்கள் சோதித்து பார்க்கப்பட்டன. அவை நல்ல பலனை அளித்ததால், அவற்றையே தேர்வு மையங்களில் பொருத்தலாம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
EC CRJ 6B5 ஜாம்மர் கருவிகள் மத்திய அரசின் நிறுவனங்களான இந்திய மின்னணு கழக நிறுவனம் (ECIL) மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிட்டெட் (BHEL) ஆகியவற்றில் தயாரிக்கப்படுகின்றன. இதனை சொந்தமாகவோ அல்லது வாடகை அடிப்படையிலோ வாங்கி பொருத்தி, தேர்வு முறைகேடுகளை தடுக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)