New Delhi: 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி தொடர்பாக, லண்டனில் இருக்கும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது குறித்த வழக்கு லண்டனில் கடந்த டிசம்பர் மாதம் முதல் நடந்து வருகிறது.
அந்த வழக்கு விசாரணையின் போது, இந்திய சிறைகளில் இயற்கையான வெளிச்சமோ அல்லது காற்றோட்டமோ இல்லை என நீதிமன்றத்தில் மல்லைய சார்பில் கூறப்பட்டுள்ளது. அதனால் தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட அனுமதிக்கக் கூடாது எனவும் மல்லையா தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
இதை கேட்ட நீதிபதி, மல்லையாவை இந்தியாவில் அடைக்க இருப்பதாக கூறப்படும், சிறையின் வீடியோ பதிவை சமர்ப்பிக்குமாறு இந்தியாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக மும்பை ஆர்த்தர் ரோடு சிறையின் புகைப்படம் இந்தியா சார்பில் கொடுக்கப்பட்டது. ஆனால், அதில் வெளிச்சம் வருவது போன்ற கேமரா யுக்தியை பயன்படுத்தப் பட்டுள்ளதாகவும், படத்தை வைத்து முடிவுக்கு வரக் கூடாது என்றும் மல்லையா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மல்லையாவை அடைத்து வைக்கப் போகும் சிறைக்குள், ஒருவர் சென்று வருவது போல் வீடியோ பதிவை எடுத்த அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் ஒருவேளை மல்லையாவுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு சொன்னால், இரண்டு மாதத்துக்குள் மல்லையா இந்தியா கொண்டு வரப்படுவார்.