ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்க உள்ள இந்திய அரசின் முன்னெடுப்பைப் பாராட்டியுள்ளார் UN Secretary-General Antonio Guterres
New York: ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ கட்டர்ஸ் (UN Secretary-General Antonio Guterres), ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்க உள்ள இந்திய அரசின் முன்னெடுப்பைப் பாராட்டியுள்ளார்.
ஐ.நா-வின் ECOSOC கூட்டத்தில் பேசிய கட்டர்ஸ், “மகாத்மா காந்தியின் (Mahatma Gandhi) பிறந்தநாளையொட்டி, அவரக்கு சிறப்பாக அஞ்சலி செலுத்த முடிவெடுத்தவர்களை நான் பாராட்டுகிறேன். தற்சார்பு வளர்ச்சியை முன்னிருத்தி எடுக்கப்படும் நடவடிக்கையானது மகாத்மா காந்திக்கு செலுத்தும் சிறப்பான அஞ்சலியாகும்.
ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதற்கு இந்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையை நான் மனமார பாராட்டுகிறேன்” என்று பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) முன்னிலையில் பேசினார்.
மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் வருவதையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சியை நியூயார்க்கில், இந்திய அரசு ஒருங்கிணைத்திருந்தது. இதில் பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி குறித்து பேசும்போது, கட்டர்ஸ், “காந்தியின் கொள்கை மற்றும் கோட்பாட்டையே ஐக்கிய நாடுகள் சபை பின்பற்றி வருகிறது. அவர் அனைத்துக்கும் மத்தியிலும் ஓர் ஒற்றுமை இருந்ததைப் பார்த்தவர். காந்தி அரசியலுக்கு அப்பாற்பட்டு, மனித உரிமைகளுக்காகவும் தற்சார்பு தொடர் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர்.
மகாத்மா, அகிம்சையை ஒரு கொள்கையாக மட்டும் முன்வைக்காமல், அரசியல் யுக்தியாகவும் கையாண்டு, நீதியையும் மாற்றத்தையும் கொண்டு வந்தார். சுத்தம், சுகாதாரத்துக்காக அவர் தொடர்ந்து பிரசாரம் செய்தார். அவரது கருத்துகள் எல்லைகளைக் கடந்தும் வாழ்ந்தன” என்று விரிவாக பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங், தென் கொரிய அதிபர் மூன்-ஜே-இன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.