This Article is From Jun 27, 2019

அமெரிக்க பொருட்கள் மீது உயர்த்திய வரிகளை திரும்பப் பெற மோடியிடம் வலியுறுத்துவேன்: டிரம்ப்

G20 summit: அமெரிக்க அதிபர் டிரம்பை பிரதமர் மோடி தேர்தலுக்கு பின் முதல்முறையாக சந்திக்க உள்ளார்.

G20 summit: பிரதமர் மோடி மற்றும் டிரம்ப் சந்திக்க உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைலைட்ஸ்

  • ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை மோடி சந்திக்கிறார்.
  • 28 அமெரிக்க தயாரிப்புகளுக்கு கட்டணத்தை உயர்த்தி இந்தியா அறிவித்திருந்தது.
  • இது ஏற்றுக்கொள்ள முடியாதது, இந்தியா அதனை திரும்ப பெற வேண்டும்.
New Delhi/Osaka:

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க தயாரிப்புகளுக்கு வரிகளை உயர்த்தி அறிவித்துள்ளது ஏற்றக்கொள்ள முடியாதது, இந்த உயர்த்திய வரிகளை இந்தியா உடனடியாக திரும்ப பெற வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

14-வது ஜி-20 உச்சி மாநாடு, ஜப்பானில் நாளை தொடங்குகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில், பிரதமர் மோடி மற்றும் டிரம்ப் சந்திக்க உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா - அமெரிக்க வர்த்தகம் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள், குறித்து இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பதிவில், பல ஆண்டுகளாக அமெரிக்காவிற்கு எதிராக மிக உயர்வான வரிகளை விதித்து வந்த இந்தியா, சமீபத்தில் இந்த வரிகளை மேலும் அதிகரித்தது என்ற உண்மையைப் பற்றி பிரதமர் மோடியுடன் பேச நான் எதிர்நோக்குகிறேன். 'இது ஏற்றுக்கொள்ள முடியாதது', உயர்த்திய வரிகளை திரும்பப் பெற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த வர்த்தக சலுகையை கடந்த ஜூன் 1 ஆம் தேதியோடு அமெரிக்கா ரத்து செய்தது. இதையடுத்து, இந்தியா அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அதிக வரிகளை விதித்தது.

அமெரிக்க அதிபர் டிரம்பை பிரதமர் மோடி தேர்தலுக்கு பின் முதல்முறையாக சந்திக்க உள்ளார். இதனிடையே, பிரதமர் மோடியின் வெற்றிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, அடுத்த 3 நாட்களில், சீனாவின் ஜின்பிங் மற்றும் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்ட 10 நாடுகளின் அதிபர்களை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.

ஒசாகாவில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றடைந்தார். அங்கு வாழும் இந்தியர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

பல வர்த்தக மற்றும் பொருளாதார பிரச்சினைகள் குறித்த இருதரப்பு உறவுகளில் உருவாகியுள்ள நெருக்கடியை அடுத்து பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர், மைக் பாம்பியோ டெல்லியில் நேற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இன்று இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில், தீவிரவாதம், எச்-1பி விசா, வர்த்தகம், ரஷ்யாவுடனான ஆயுத ஒப்பந்தம், இரானில் இருந்து எண்ணை கொள்முதல் செய்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த மாநாட்டில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

(With inputs from PTI and Reuters)

.