This Article is From Nov 16, 2018

தேர்தல் வரவுள்ள நிலையில் தெலங்கானாவில் ரூ.70 கோடி பறிமுதல்!

தெலங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கிறது

தேர்தல் வரவுள்ள நிலையில் தெலங்கானாவில் ரூ.70 கோடி பறிமுதல்!

மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில் 70 கோடி ரூபாய் பணம் சிக்கியுள்ளது

Hyderabad:

தெலங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில் 70 கோடி ரூபாய் பணம் சிக்கியுள்ளது.

இதைத் தவிர, 6.70 கோடி ரூபாய் மதிப்பிலான சட்ட விரோத மதுபானங்களை போலீஸ் மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்தத் தகவலை தெலங்கானா மாநில தேர்தல் ஆணையர் ராஜத் குமார் தெரிவித்துள்ளார்.

அவர் இந்த விவகாரம் குறித்து, ‘சில அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், மக்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதற்கு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. மேலும் சிலர், மதம் மற்றும் சாதியை முன்னிறுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் எங்களுக்குத் தெரிய வந்துள்ளது. இதைப் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது சட்ட விரோதமாகும். இது குறித்து ஆதாரபூர்வமாக தெரிய வந்தால், சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று விளக்கம் அளித்துள்ளார்.

அடுத்த மாதம் 7 ஆம் தேதி நடக்கவுள்ள தெலங்கானா தேர்தலுக்கு இதுவரை 540 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். காங்கிரஸ் சார்பில் 77 பேரும், ஆளுங்கட்சியான தெலங்கானா ராஷ்டிர சமிதி சார்பில் 98 பேரும், பஜக சார்பாக 65 பேரும், தெலுங்கு தேசம் கட்சி சார்பாக 14 பேரும் இதுவரை வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

நவம்பர் 12 ஆம் தேதியிலிருந்து வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 19 ஆம் தேதியுடன் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் காலக்கெடு முடிவுக்கு வருகிறது.

.