This Article is From Jul 18, 2018

‘அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் பங்கு என்ன..?’- ட்ரம்ப் சர்ச்சை கருத்து

2016 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டு பல திள்ளு முள்ளு விஷயங்களைச் செய்தது என தொடர்ந்து குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது

‘அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் பங்கு என்ன..?’- ட்ரம்ப் சர்ச்சை கருத்து
Washington, United States:

2016 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டு பல திள்ளு முள்ளு விஷயங்களைச் செய்தது என தொடர்ந்து குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்நாட்டுக்குப் பயணம் செய்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். 

2016 ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளின்டனுக்கும் குடியரசுக் கட்சியின் டொனால்டு ட்ரம்ப்புக்கும் இடையில் அமெரிக்க அதிபர் ஆவதில் போட்டி நடந்தது. பெரும்பான்மையோரின் எதிர்பார்ப்புகளை மீறி ட்ரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். தொடர்ந்து பல அதிர்ச்சியளிக்கும் நடவடிக்கைகளை அவர் செயல்படுத்தி வரும் நிலையில், ‘2016 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டு, ட்ரம்புக்கு ஆதரவாக செயல்பட்டது’ என்ற பரபரப்புக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து அமெரிக்காவின் உளவுத்துறையே தற்போது விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை ஆதரபூர்வமாக எந்த தரவுகளும் கிடைக்காத நிலையில், ட்ரம்ப் மீதான குற்றம் நிரூபிக்கப்படாத நிலை உள்ளது.

இந்நிலையில் ட்ரம்ப், ரஷ்யாவுக்குப் பயணம் செய்து அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதினை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்துப் பேசினார். அப்போது அவர், ‘அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா ஏன் தலையிட்டிருக்க வேண்டும்?’ என்றொரு கருத்தை தெரிவித்தார். வெளிப்படையாக பார்த்தால் இது சாதாரண கருத்தாக தோன்றினாலும், இது பூடகமாக ரஷ்யாவுக்கு ஆதரவாக சொல்லப்பட்ட கருத்து போல் தெரிந்தது. புதினும் ட்ரம்பும் மறைமுக கூட்டாளிகள் என்று அமெரிக்காவில் பலர் குற்றம் சாட்டி வரும் நிலையில், ட்ரம்பின் இந்தக் கருத்து பலத்த விமர்சனங்களுக்கு உள்ளானது. 

குறிப்பாக பலர், ‘இது அப்பட்டமாக ரஷ்யவைக் காப்பாற்ற சொல்லும் கருத்து என்பது தெரிகிறது’ என்று கருத்து கூற, ஒரு நாள் கழித்து, தான் எதிர்பாராத விதமாக தவறான கருத்தை சொல்லிவிட்டேன் என்று விளக்கம் அளித்தார் ட்ரம்ப். ‘ ‘அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டிருக்க வாய்ப்புள்ளது’ என்று சொல்வதற்கு பதில் தவறாக சொல்லிவிட்டேன்’ என்று சமாளித்தார். 

ஆனால் ட்ரம்பின் இந்தக் கருத்து மேலும் பல சந்தேகங்களைத் தான் கிளப்பியுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து ட்ரம்ப் கட்சியைச் சேர்ந்த பால் ரியான் என்ற மக்கள் பிரதிநிதி, ‘நமக்கு இருக்கும் கொள்கையும் கோட்பாடும் ரஷ்ய அதிபர் புதினுக்கு இல்லை. நமக்கு இருக்கும் குறிக்கோளும் அவருக்கு இருக்கும் குறிக்கோளும் வெவ்வேறானவை. ரஷ்யா நமது தேர்தலில் தலையிட்டதா என்பது குறித்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆம், ரஷ்யா நமது தேர்தலில் தலையிட்டது உண்மை தான். நமது ஜனநாயக மாண்பையே ரஷ்யா கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது’ என்று ட்ரம்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
 

.