அரசியல் பேச இது சரியான நேரமாக இருக்காது என செய்தியாளர்கள் சந்திப்பை பிரயங்கா ரத்து செய்தார்.
Lucknow: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி, சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் காரணமாக, தனது முதல் பத்திரிகையாளர்கள் சந்திப்பை பிரியங்கா ரத்து செய்தார்.
ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவத்தினர் 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர். காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஜைஸ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
முதல்கட்ட தகவலின்படி, புல்வாமா மாவட்டத்தின் கோரிபோரா பகுதியில் சென்று கொண்டிருந்த துணை ராணுவத்தினரின் வாகனத்தின் மீது காரை கொண்டு மோதி அதிலிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த அதில் அகமது என்பவர், ஸ்கார்பியோ காரில் 350 கிலோ எடைகொண்ட வெடி பொருட்களை நிரப்பியுள்ளார். பின்னர் ரிசர்ப் போலீசார் சென்ற பஸ் மீது வேகமாக மோதி பஸ்ஸை வெடிக்கச் செய்துள்ளார்.
அந்த பேருந்துக்குள் சுமார் 40 ரிசர்வ் போலீசார் இருந்தனர். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். பலி எண்ணிக்கை முதலில் 18-ஆக இருந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து தற்போது 40 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், 13 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் முதன்முதலாக இன்று மாலை பிரியங்கா காந்தி பத்திரிகையாளர்களை சந்திக்க முடிவு செய்தார். பேட்டிக்கு தயாரானபோது, ஜம்மு-காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் செய்தி குறித்து அறிந்தார். இதனால் உடனடியான தனது முதல் பேட்டியை ரத்து செய்தார். அத்துடன் இரங்கல் தெரிவித்தார்.
இப்போது அரசியலைப் பற்றி பேசுவது பொருத்தமானதாக இருக்காது என நினைக்கிறேன். பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 40 சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இது போன்ற கடினமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நாங்கள் இருக்கிறோம் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
குடும்பத்தில் நாம் மிகவும் நேசிக்கும் ஒருவரின் இழப்பு எப்படி இருக்கும் என்பதை நான் அறிவேன். காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடே உங்கள் தோளோடு தோள் நிற்கிறோம் என்பதை தெரிவித்து கொள்கிறேன். இதுபோன்ற தாக்குதல் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.