Budget 2020: 2008-09 நிதி ஆண்டிற்குப் பின்னர் இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில் இன்றைய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
தனி நபருக்கான வருமான வரியை குறைத்து மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது நடுத்தர மக்களிடையே வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சம் முதல் 7.5 லட்ச ரூபாய் வரை இருப்பவர்கள் இதுவரையில் 20 சதவீதத்தை வருமான வரியாக செலுத்தி வந்தனர். இது 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ரூ. 7.5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெற்றவர்கள் செலுத்தி வந்த 20 சதவீத வரி தற்போது 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ரூ. 10 லட்சம் முதல் ரூ. 12.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உடையவர்கள் செலுத்தி வந்த 30 சதவீத வருமான வரி 20 சதவீதமாகவும், ரூ. 12.5 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரையில் ஆண்டு வருமானம் உடையவர்கள் செலுத்தி வந்த 30 சதவீத வருமான வரி தற்போது 25 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
ரூ. 15 லட்சத்திற்கும் அதிகமாக ஆண்டு வருமானம் உடையவர்கள் செலுத்தி வந்த 30 சதவீத வருமான வரியில் மாற்றம் செய்யப்படவில்லை.
கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ.5 லட்சம் ஆண்டு வருமானம் உடையவர்கள் வரி செலுத்த தேவையில்லை என்ற அறிவிப்பிலும் மாற்றம் கொண்டுவரப்படவில்லை.
2020 மத்திய பட்ஜெட்டின் லைவ் அப்டேட்ஸ்:
இரத்த அழுத்தம் குறைந்தது...
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 2 மணி 41 நிமிடங்களாக பட்ஜெட் உரையை வாசித்தார். இதனால் அவருக்கு இரத்த அழுத்தம் குறைந்தது. இன்னும் 2 பக்கங்கள் வாசிக்க வேண்டியள்ள நிலையில், ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளார்.
இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக பட்ஜெட் உரை
இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையாற்றினார். 2.40 மணிநேரம் வாசித்ததால் சோர்ந்து காணப்பட்ட அவர், உரையை முன்னதாகவே முடித்துக்கொண்டுள்ளார்.
வருமான வரிக் குறைப்பால் ஏற்படும் இழப்பு!
வருமான வரியில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களால் அரசுக்கு 40,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்: நிதி அமைச்சர்
தனி நபர் வருமான வரியில் மாற்றம்!
7.5 - 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு 15 சதவிகித வரியும், 10 - 12.5 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 20 சதவிகித வரியும், 12.5 - 15 லட்சம் ரூபாய் வரை ஈட்டுவோருக்கு 25 சதவிகித வரியும் விதிக்கப்படும்: நிதி அமைச்சர்.
தனி நபர் வருமான வரி குறைப்பு!
ஆண்டுக்கு 5 முதல் 7.5 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனி நபர்களுக்கு 10 சதவிகித வரி வசூலிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு. முன்னர், இந்த வருமான அளவுக்கு 20 சதவிகித வரி வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் 2020: 2021 நிதி ஆண்டில் 10% ஜிடிபி வளர்ச்சி
2020 - 2021 நிதி ஆண்டிற்கான ஜிடிபி வளர்ச்சியை 10 சதவிகிதமாக கணித்துள்ளோம்: நிர்மலா சீதாராமன்
பட்ஜெட் 2020: எல்ஐசி நிறுவனத்தில் மத்திய அரசின் பங்கு விற்பனை!
எல்ஐசி நிறுவனத்தில் மத்திய அரசுக்கு இருக்கும் பங்கின் ஒரு பகுதியை விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளது- நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
வங்கியில் வைப்புத் தொகை வைப்பவர்களுக்கு…
'வங்கிகளில் வைப்புத் தொகை வைக்கும் நபர்களுக்கு காப்பிட்டுத் தொகை 1 லட்ச ரூபாயிலிருந்து 5 லட்ச ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் சட்டம் திருத்தப்படும். இதன் மூலம் வங்கிகள் மேலும் ஆக்கப்பூர்வமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் செயலாற்ற முடியும்'
‘வரி செலுத்துவோருக்கு துன்புறுத்தல் நிகழாது’
எங்கள் அரசு ஒரு விஷயத்தைத் தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறது. வரி கட்டும் நபர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாக மாட்டார்கள். நிறுவனங்கள் சட்டத்தில் சில மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. அதேபோல வேறு சில சட்டங்களிலும் திருத்தங்கள் செய்ய பரிந்துரைக்கப்படும்- நிதி அமைச்சர்
‘அரசு ஊழலற்றதாக உள்ளது’
'மத்திய அரசு ஊழலற்று சுத்தமாக உள்ளது,' என பட்ஜெட் உரையின் போது நிர்மலா சீதாராமன் சொல்ல, அதற்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்தன.
சுத்தமான காற்றுக்காக நிதி ஒதுக்கீடு!
பெரிய நகரங்களில் சுத்தமான காற்று என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. இதையொட்டி சுத்தமான காற்றுக்கான திட்டங்களுக்கு 4,400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்- நிதி அமைச்சர்
எஸ்/ஓபிசி-களுக்கு ரூ.85,000 கோடி ஒதுக்கீடு
2021 நிதி ஆண்டில் பட்டியலினத்தவர்கள் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு 85,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். பழங்குடியினருக்கு 53,700 கோடி ரூபாய் ஒதுக்கீடும், மாற்றுத் திறனாளிகளுக்கு 9,500 கோடி ரூபாயும் ஒதுக்கீடும் செய்யப்படும்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
சிறுமிகள் மற்றும் பெண்களின் ஊட்டச்சத்து பற்றி…
சிறுமிகள் மற்றும் பெண்களின் ஊட்டச்சத்துக்கு குறித்து தெரிந்து கொள்ள, 6 லட்சம் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 கோடி பேர் வீட்டில் உள்ள நிலையை அறிய முடிகிறது: நிதி அமைச்சர்
வருகிறது ப்ரீபெய்டு மீட்டர்!
3 ஆண்டுகளில் ப்ரீபெய்டு பவர் மீட்டர்கள் அறிமுகப்படுத்தப்படும். நுகர்வோர், தங்களுக்கு உகந்த கட்டணத்தைக் கொண்ட நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்: நிதி அமைச்சர்
சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ் வழித்தடம் விரைவில்…
டெல்லி - மும்பை இடையிலான எக்ஸ்பிரஸ் வழித்தடம் 2023 ஆம் ஆண்டு முடிக்கப்படும். அதேபோல சென்னை - பெங்களூரு இடையிலான எக்ஸ்பிரஸ் வழித்தடம் சீக்கிரம் ஆரம்பிக்கப்படும்- நிதி அமைச்சர்
5 புதிய ஸ்மார்ட் நகரங்கள்!
அரசு - தனியார் பங்கீட்டில் 5 புதிய ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்படும்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
சுகாதாரத் துறைக்கு ரூ.69,000 கோடி!
சுகாதாரத் துறைக்கு 69,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டு வரும்போது உலகில் அதிக பேர் வேலை செய்யும் நாடாக இந்தியா இருக்கும். இதையொட்டி, மாநில கல்வி அமைச்சர்களிடம் பேசி வருகிறோம். நகர்ப்புற நிர்வாகங்களில் புதிய பொறியாளர்களுக்கு இன்டர்ன்ஷிப் கொடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். அரசுடன் பணிபுரிய விரும்பும் புதிய பொறியாளர்கள், நகர்ப்புற உள்ளூர் பொறியாளர்களுடன் பணிபுரிய ஆரம்பிக்கலாம்: நிர்மலா சீதாராமன்
ஆயுஷ்மன் பாரத் திட்டத்திற்குக் கீழ்
ஆயுஷ்மன் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அதிக மருத்துவமனைகள் சேர்க்கப்படும். டிபி தோற்கும். நாடு வெல்லும்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
விவசாயப் பொருட்கள் ஏற்றிச் செல்ல “கிசான் ரயில்”
"இந்திய ரயில்வே துறை 'கிசான் ரயில்'-ஐ கொண்டு வரும். இதன் மூலம் விவசாயப் பொருட்கள் வேகமாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்படும். அந்த ரயிலில் குளிர்சாதனப் பெட்டிகள் இருக்கும். உள்ளூர் மற்றும் சர்வதேச வழித் தடங்களில் கிசான் உடானும் உருவாக்கப்படும்," என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.
பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு:
"20 லட்சம் விவசாயிகளுக்கு சோலார் பம்புகள் பொறுத்த வசதி செய்து தரப்படும். 15 லட்சம் விவசாயிகளுக்கு சோலார் கிரிட் இணைக்கப்பட்ட பம்புகள் வழங்கப்படும். காலி இடங்கள் சோலார் ஆலைகள் அமைக்க பயன்படுத்தப்படலாம்,"- நிதி அமைச்சர்.
விவசாயிகள் வருவாய் பற்றி பட்ஜெட்டில்…
"இந்த பட்ஜெட்டின் முக்கிய நோக்கம் விவசாயம், பாசனம் மற்றும் கிராமப்புற வளர்ச்சியாகும். 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானதைத இரட்டிப்பாக நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,"- நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
“பட்ஜெட்டை வழிநடத்தும் 3 விஷயங்கள்…”- நிதி அமைச்சர்
"இந்தியாவின் தொழில்முனையும் ஆற்றலை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம். இந்த பட்ஜெட்டின் மூன்று ஆதாரங்கள் நோக்கமுள்ள இந்தியா, அனைவருக்கும் பொருளாதார வளர்ச்சி, அக்கறை கொண்ட சமூகமாக நாம் இருக்க வேண்டும் என்பதேயாகும்"- நிர்மலா சீதாராமன்
வறுமை ஒழிப்பு: நிதி அமைச்சர் உரை!
"2015 முதல் 2016 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இந்தியா, 27.1 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டது. இது உலகளவில் அங்கீகரிக்கப்பட்டது. ஜிஎஸ்டி வரி முறையால் ஒரு வீட்டில் சராசரியாக 4 சதவிகிதம் சேமிக்கப்படுகிறது,"- நிர்மலா சீதாராமன்.
பொருளாதாரத்தின் அடிப்படை பலமாக உள்ளது: நிர்மலா சீதாராமன்
"மறைந்த பெரும் தலைவர் அருண் ஜெட்லிக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன்... பொருளாதாரத்தின் அடிப்படை பலமாக உள்ளது. அதுதான் ஸ்திரத்தன்மையைக் கொடுத்துள்ளது. பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. 2019 மே மாதம், பிரதமர் நரேந்திர மோடி நாட்டை ஆளுவதற்கு மிகப் பெரும் தீர்ப்பு கொடுக்கப்பட்டது. மீண்டும் புத்துணர்வோடு மக்களுக்கு தாழ்மையுடன் சேவையாற்றக் கடமைப்பட்டிருக்கிறோம்," என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
2020 பட்ஜெட் உரையை ஆரம்பித்த நிர்மலா சீதாராமன்:
"இந்த பட்ஜெட் வருவாயைப் கூட்டும். வளர்ச்சி மூலமே வருவாயைக் கூட்ட முடியும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதுமையைப் புகுத்துவோம்," என்று நிதி அமைச்சர் சீதாராமன் பேசினார்.
நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வந்தடைந்தார்!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அனுராக் தாக்கூர் மத்திய பட்ஜெட்-ஐ தாக்கல் செய்வதற்கு நாடாளுமன்றம் வந்தடைந்தனர்.
பட்ஜெட்டுக்கு முன்னர் பிரதமர் மோடி நாடாளுமன்றம் வந்தார்!
மத்திய பட்ஜெட் 2020 தாக்கல் செய்வதற்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார்.
ஜனாதிபதியை சந்தித்த நிதி அமைச்சர்!
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன்னர், மரபுக்காக ராஷ்டிரபதி பவனில் இருக்கும் ஜனாதிபதியை சந்தித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அலுவலகத்தின் சார்பாக ட்வீட் பதிவிடப்பட்டுள்ளது.
பட்ஜெட்டுக்கு முன்னர் பிரார்த்தனை!
அமைச்சர் அனுராக் தாக்கூர், 2020 மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்னர் தனது வீட்டில் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
தனி நபர் வரிக் குறைப்புக்கு வாய்ப்பு!
பொதுத் துறை வங்கிகளை ஒன்றிணைத்தல், கார்ப்பரேட் வரிக் குறைப்பு, அதிக அந்நிய நேரடி முதலீடு, சுலபமாக்கப்பட்ட பணப் புழக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளால் கூட, தேசிய அளவில் முதலீடுகளை அதிக அளவு ஈர்க்க முடியவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் கார்ப்பரேட் வரிக் குறைப்பு செய்யப்பட்டதில் இருந்து, தனி நபர் வரிக் குறைப்புக்கும் வாய்ப்பிருப்பதாக பார்க்கப்பட்டது. தனி நபர் வரி விதிப்பிற்கான அடிப்படை வருமான மதிப்பீட்டில் மாற்றம் அல்லது, வெவ்வேறு வருவாயுடையவர்களுக்கு அதற்குத் தகுந்தது போல வரி விதிப்பு அறிவிப்புகள் வெளியாகலாம்.
2020 மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிதி அமைச்சர் தயார்!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், டெல்லியில் உள்ள நிதி அமைச்சக கட்டடத்திலிருந்து தனது குழுவுடன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய வெளியே வந்தார். குடியரசுத் தலைவரைப் பார்க்கும் முன்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் நிர்மலா. அப்போது பட்ஜெட் குறித்த ஆவணங்களை சிவப்பு நிற துணியில் வைத்திருந்தார்.
உணவு மானியங்களுக்கான நிதி:
அடுத்த நிதி ஆண்டில் மத்திய அரசு, உணவு மானியங்களுக்கு 1.90 டிரில்லியன் ரூபாய் ஒதுக்கும் எனத் தெரிகிறது. அதே நேரத்தில் உணவுத் துறை அமைச்சகம், 2 டிரில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கக் கோரியது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள்:
கடந்த நிதி ஆண்டில் முதலீடுகளுக்கான வளர்ச்சி 10 சதவிகிதம் இருந்தது. ஆனால், அது நடப்பு நிதி ஆண்டில் 1 சதவிகிதமாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல நுகர்வு வளர்ச்சி விகிதம் 8.1 சதவிகிதத்திலிருந்து 5.8 சதவிகிதமாக குறையும் எனப்படுகிறது. இந்நிலையில் நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர், கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், 'பொருளாதார வளர்ச்சிக்காக மத்திய அரசு, சீர்திருத்தங்களைக் கொண்டு வரும்,' என்று தெரிவித்துள்ளார்.
உலக அளவில் நிலவும் வர்த்தக்ப் பதற்றம்:
உலக அளவில் இருக்கும் வர்த்தகப் பதற்றம் மற்றும் சீனாவில் கொரனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் பொருளாதார மீட்சியில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் என்று சில வல்லுநர்கள் கூறுகின்றனர். இது குறித்து ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸைச் சேர்ந்த அனகா தியோதர், "முதலீடுகளுக்காக சமீப காலமாக அதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும் பொருதார முன்னேற்றம் மந்தமாகவே இருக்கும்," என்கிறார்.
உள்கட்டமைப்பில் அதிக முதலீடு:
முன்னரே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்கட்டமைப்புகளுக்கு 105 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டினை அறிவித்திருந்தார். இதற்கான திட்டங்கள் இன்று அறிவிக்கப்படலாம். இந்த அறிவிப்பானது இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் சந்தையாக மாற்ற உதவும். 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, பதவியேற்றதில் இருந்து, சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களின் கட்டமைப்புகளில் அதிக முதலீடு செய்து வருகிறார்.
நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க வாய்ப்பு!
மத்திய அரசு, தனது நிதிப் பற்றாக்குறை இலக்கை தளர்த்த வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது. வருவாய் ஈட்டலில் சுணக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலையைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் எனப்படுகிறது.
மத்திய பட்ஜெட் 2020:
இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் தொடர்ந்து 5 காலாண்டுகளாக வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.