This Article is From Jun 03, 2019

''பொருளாதார நெருக்கடிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தீர்வு காண வேண்டும்'' : சிவசேனா

மே 31-ம்தேதி பொருளாதாரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அது நாட்டின் வளர்ச்சி விகிதம் 5.8 சதவீதமாக மட்டுமே உள்ளதென்று தெரிவித்தது.

''பொருளாதார நெருக்கடிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தீர்வு காண வேண்டும்'' : சிவசேனா

மக்களவை தேர்தலில் மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனாவுடன் பாஜக கூட்டணி வைத்திருந்தது.

Mumbai:

பொருளாதார நெருக்கடிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தீர்வு காண வேண்டும் என்று பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா வலியுறுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக குறைந்து விட்டதென புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ள நிலையில், சிவசேனாவில் இருந்து இந்த குரல் எழுந்துள்ளது. 

தேசிய புள்ளியியல் மையம் நாட்டின் வளர்ச்சி, பொருளாதார நிலை உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டு வருகிறது. மே 31-ம்தேதி நாட்டின் உள்நாட்டு உற்பத்தி குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன. இதன்படி நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டின் முதல் கால் பகுதியில்  (ஜனவரி - மார்ச்) 5.8 சதவிதமாக உள்ளதென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தகவல் வெளியானதும் மத்திய பாஜக அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கின. இத்தகைய சூழலில் மோடியின் முந்தைய அரசில் நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, உடல்நலக் குறைவு காரணமாக அமைச்சரவையில் இடம் வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து நிதித்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார். 

பொருளாதாரம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியான நிலையில், சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில் அதுகுறித்த தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-

தேசிய புள்ளியியல் ஆய்வை மையம் தெரிவித்துள்ள விவரங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. வேலை வாய்ப்பின்மை 6.1 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. இது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகம். 

2014-ல் ஆட்சிக்கு வந்தபின்னர் ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தார். 2015-16-ல் 37 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதென அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 1.48 லட்சம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன. 

விவசாயத்தின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. கடந்த 5 மாதங்களில் மகாராஷ்டிராவில் மராத்வாடாவில் மட்டும் 315 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். வேலைவாப்பை மக்களுக்கு வழங்குவது அரசின் கடமை. தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார சிக்கல்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடி தீர்வை காண வேண்டும். 

இவ்வாறு சாம்னா தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது. 

.