This Article is From Feb 21, 2020

'சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மார்ச் மாதம் குறையும்' - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்

'குளிர்காலத்தின்போது சமையல் எரிவாயு உருளையின் விலை அதிகரிக்கிறது. இது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கியாஸின் விலை அடுத்த மாதம் குறையும்' என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

'சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மார்ச் மாதம் குறையும்' - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்

கியாஸின் விலை படிப்படியாக உயர்கிறது என்ற தகவல் உண்மையல்ல என்கிறார் அமைச்சர்.

Raipur:

சமையல் கியாஸின் விலை மார்ச் மாதம் குறையும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். சட்டீஸ்கர் மாநிலத்தில் 2 நாட்கள் அரசுமுறைப் பயணமாக வந்த அவர், ராய்ப்பூர் சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது-

சமையல் எரிவாயு உருளையின் விலை படிப்படியாக உயரும் என்று தகவல்கள் வெளியாகின. அவை உண்மையல்ல. சர்வதேசச் சந்தையில் ஏற்பட்ட விலை உயர்வால் கியாஸ் விலை இந்த மாதம் உயர்த்தப்பட்டது. அடுத்த மாதம் கியாஸ் சிலிண்டர் விலை குறையும். 

குளிர்காலத்தின்போது சமையல் எரிவாயு உருளையின் விலை அதிகரிக்கிறது. இது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கியாஸின் விலை அடுத்த மாதம் குறையும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

கடந்த மாதம் சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ. 144.50 அளவுக்கு உயர்ந்தது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்வின் விளைவாக சிலிண்டர் விலை அதிகரித்தது. இருப்பினும் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. 

2 நாட்கள் சுற்றுப் பயணத்தின்போது அமைச்சர் துர்க் மாவட்டத்தில் அமைந்துள்ள பிலாய் ஸ்டீல் தொழிற்சாலைக்குச் சென்று பார்வையிட்டார். 

இதேபோன்று அண்டை மாவட்டமான பலோடில் அமைந்துள்ள பிலாய் ஸ்டீல் தொழிற்சாலைக்கும் அமைச்சர் சென்றார். 

இதன்பின்னர் அளித்த பேட்டியில், 'நாட்டின் ஸ்டீல் தொழிலில் பிலாய் ஸ்டீல் தொழிற்சாலை முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக ரயில்வேயில் ரயில் உருவாக்கத்திற்குத் தேவையானவற்றில் 98 சதவீதத்தை இந்த தொழிற்சாலை வழங்குகிறது. இதனை எப்படி மேம்படுத்துவது, உற்பத்தியை எப்படி அதிகரிப்பது என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன்' என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். 

.