குழந்தைகள் ஆபாசப்படங்களை தடுப்பதற்கு நாடாளுமன்றமும், நாட்டு மக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ரவிசங்கர் கூறியுள்ளார்.
New Delhi: ஆபாசப் படங்கள் என்பவை மிகப்பெரும் அச்சுறுத்தல் என்று கூறியுள்ள மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அதனை ஒழிப்பதற்கு மத்திய அரசு மாநில அரசுடனும், மாநில போலீசாருடனும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளார்.
மக்களவையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்க மாநிலம் செராம்போர் மக்களவை தொகுதி உறுப்பினர் கல்யாண் பானர்ஜி கேள்வி ஒன்றை இன்று எழுப்பினார். அதில், சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் வருவது, குழந்தைகள் ஆபாசப்படங்கள் உள்ளிட்டவற்றை தடுக்க மத்திய அரசு எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது, இதுதொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, எத்தனை பேருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை கேட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், 'ஆபாசப்படங்கள், குறிப்பாக குழந்தைகள் ஆபாசப்படங்கள் என்பவை மிகப்பெரும் அச்சுறுத்தலாகும். இதனைத் தடுக்க மத்திய அரசு மாநில அரசுடனும், மாநில போலீசாருடனும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
குழந்தைகள் ஆபாசப்படம், சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுதல் விவகாரத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த நாடும் இந்த அபாயத்தை புரிந்து கொள்ள வேண்டும். இந்த சமூக பிரச்னைகளை நாடாளுமன்றமும், நாட்டு மக்களும் சேர்ந்து ஒழிக்கப் பாடுபட வேண்டும் ' என்று கூறியுள்ளார்.