இந்திய அரசு தரப்பு, ‘காஷ்மீர், எங்களின் உள்விவகாரம்’ என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
New Delhi: ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு சட்ட அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது இந்திய அரசு. அது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா சபை மனித உரிமைகள் ஆணையத் தலைவர் மிஷெல் பேச்லெட், “காஷ்மீர் விவகாரம் மிகவும் கவலையளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
“காஷ்மீரிகளின் மனித உரிமைகளுக்கு சம்பந்தமுடைய இந்திய அரசின் சமீபத்திய நடவடிக்கைகள் மிகவும் கவலையளிக்கின்றன. இணைய சேவை, அமைதியாக கூடுதல், உள்ளூர் அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டது உள்ளிட்ட நடவடிக்கைகள் சரியானது கிடையாது.
இந்திய மற்றும் பாகிஸ்தான் அரசுகளிடம் மனித உரிமைகள் பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுக்குமாறுக் கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக இந்தியாவிடம் இந்தக் கோரிக்கையை வைக்கிறேன். காஷ்மீரிகளின் எதிர்காலத்தில் தாக்கம் ஏற்படுத்தப்போகும் எந்தவித நடவடிக்கையிலும் அவர்களும் பங்கேடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
கடந்த மாதம் இந்திய அரசு, காஷ்மீர் சிறப்பு சட்ட அந்தஸ்தை ரத்து செய்து, அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த முடிவினால் அங்கு பிரச்னை எழுந்துவிடக் கூடாது என்கிற நோக்கில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். அதேபோல தொலைதொடர்பு சேவைகளும் துண்டிக்கப்பட்டன. அப்பகுதியில் இருக்கும் முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. சர்வதேச மன்றங்களில் காஷ்மீர் விவகாரம் குறித்து தொடர்ந்து பிரச்னை எழுப்பி வருகிறது பாகிஸ்தான் அரசு தரப்பு. அதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய அரசு தரப்பு, ‘காஷ்மீர், எங்களின் உள்விவகாரம்' என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அசாமில் வெளிவந்துள்ள ‘தேசிய குடிமக்கள் பதிவேடு' குறித்தும் மிஷெல் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “அசாமின் குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெறாதவர்களுக்கு, உரிய சட்ட சலுகைகள் வழங்கப்பட வேண்டும். அவர்களின் சட்ட மனுக்கள் முறையாக விசாரிக்கப்பட வேண்டும். தேசமற்றவர்களாக மக்கள் ஆக்கப்படுவது கூடாது” என்று கூறியுள்ளார்.