2-வது நாளான இன்று வெளி மாநில தொழிலாளர் நலன் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஹைலைட்ஸ்
- ரூ. 20 கோடி மதிப்பிலான சிறப்பு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார்
- சிறப்பு திட்டத்தின் விவரங்களை நிதியமைச்சர் நிர்மலா விளக்கி வருகிறார்
- இன்று வெளி மாநில தொழிலாளர் நலன் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது
New Delhi: தற்சார்பு இந்தியா திட்டம் தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2-வது நாளாக அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள் :
1. கடந்த 2 மாதங்களில் 25 லட்சம் கிசான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. 3 கோடி விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் ரூ. 4.22 லட்சம் கோடிக்கு கடன் வழங்கியுள்ளோம். சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி மே 31-ம் தேதி வரை தள்ளுபடி செய்யப்படுகிறது.
2. மார்ச் 1 முதல் ஏப்ரல் 30 வரையில் 63 லட்சம் கடன்கள் ரூ. 86 கோடி மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நபார்ட், கூட்டுறவு, கிராமப்புற வங்கிகள் மூலம் ரூ. 29,500 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புற உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ. 4,200 கோடி அளிக்கப்பட்டுள்ளது.
3. கொரோனா பாதிப்பின்போது 12 ஆயிரம் சுய உதவி குழுக்கள் அமைக்கப்பட்டன. அவர்கள் மூலம் 3 கோடி மாஸ்க்குகள், 1.20 லட்சம் லிட்டர் சானிட்டைசர்கள் தயாரிக்கப்பட்டன.
4. வெளிமாநில தொழிலாளர்கள் தங்கவும், உணவுக்காகவும் ரூ. 11 ஆயிரம் கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நகர்ப்புற, கிராமப்புற ஏழைகளின் நலனுக்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
5. வீடில்லாமல் இருப்போருக்கு மத்திய அரசின் உதவியோடு மாநில அரசுகள் 3 வேளையும் உணவளித்துள்ளன. வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் 100 நாட்கள் வேலை திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் மேற்கொள்ள வேண்டும்.
6. கடந்த ஆண்டு பதிவு செய்தவர்களை விட ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் இந்தாண்டு பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 40 முதல் 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
7. அடுத்த 2 மாதங்களுக்கு வெளி மாநில தொழிலாளர்களுக்கு இலவசமாக உணவுப் பொருட்களாக அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும். இதனால் சுமார் 8 கோடி வெளி மாநில தொழிலாளர்கள் பலன் அடைவார்கள். இதற்கான மொத்த செலவையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும். இந்த வகைக்காக ரூ. 3,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டை இல்லாதவர்களும் உணவுப் பொருளை பெற்றுக் கொள்ளலாம்.
8. ரூ. 50 ஆயிரத்திற்கு குறைவாக முத்ரா திட்டத்தில் கடன்பெற்றோர் குறித்த காலத்தில் கடனை திருப்பி செலுத்தினால் அவர்களுக்கு 2 சதவீத வட்டி தள்ளுபடி செய்யப்படும். இந்த வகைக்காக ரூ. 1,500 கோடி ஒதுக்கப்படும்.
9, நடைபாதை வியாபாரிகளின் நலனுக்காக ரூ. 5 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். சிறப்புத் திட்டத்தின் மூலம் அவர்களுக்கு கடனுதவி வழங்கப்படும். வியாபாரிகளுக்கு ரூ. 10 ஆயிரம் வரையில் கடன் வழங்குவதன் மூலம் சுமார் 50 லட்சம் பேர் பலன் பெறுவார்கள்.
10, கொரோனா காலத்தில் மட்டும் 100 நாட்கள் வேலை திட்டத்திற்கு ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக நாள்தோறும் வழங்கப்படும் கூலி ரூ. 182 -ல் இருந்து ரூ. 202 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.