Gonda (Uttar Pradesh): உத்திரபிரதேச மாநிலம் பைசாபாத்தில் உள்ள ராம் மனோகர் லோஹியா பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட ரவிந்தர சிங் ஸ்மராக் மஹாவித்யாலாவில் மாணவர் ஒருவரின் தேர்வு நுழைவுச்சீட்டில், அவரது புகைப்படத்திற்கு பதிலாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் புகைப்படம் அச்சிடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமித் திவேதி என்னும் மாணவர் ரவிந்தர சிங் ஸ்மராக் மஹாவித்யாலாவில் பி.எட் படித்து வருகிறார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மாணவர் கூறுகையில், “இரண்டாம் வருடத்தேர்வு எழுத விண்ணப்பத்தை பூர்த்தி செய்த நான், என்னுடைய புகைப்படத்தை தெளிவாக பதிவு செய்தேன். ஆனால், தேர்வு நுழைவுச்சீட்டை பெற்று கொடுத்த போது, அதில் என்னுடைய புகைப்படத்திற்கு பதிலாக, நடிகர் அமிதாப் பச்சனின் புகைப்படம் இருந்தது. இதனால் கூடுதல் ஆவணங்கள் சமர்பித்த பிறகே, நான் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டேன். எனினும், என்னுடைய மதிப்பெண் சான்றிதழ்களில் அமிதாப் பச்சனின் புகைப்படம் இருக்குமோ என்ற கவலை உள்ளது” என்று கூறினார்.
இந்நிலையில் ரவிந்தர சிங் ஸ்மராக் மஹாவித்யாலாவின் மூத்த நிர்வாகி குருபேந்தர மிஸ்ரா கூறுகையில், தேர்வுக்காக விண்ணப்பித்த அமித் எங்கள் கல்லூரி மாணவர் தான். விண்ணப்பத்தை பூர்த்தி செய்த மாணவர் தவறு செய்திருக்கலாம் அல்லது இணையதள மையத்தில் தவறு ஏற்பட்டிருக்கலாம். கல்லூரி நிர்வாகத்தின் மீது தவறு இருக்க வாய்ப்பில்லை. தேர்வு மையத்தில் நாங்கள் தகவல் தெரிவித்த பிறகு, அவர் அனுமதிக்கப்பட்டார். மேலும், மாணவரின் மதிப்பெண் சான்றிதழ்கள் சரியான முறையில் வழங்கப்படும் என்று உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு நுழைவுச்சீட்டில், நடிகர் அமிதாப் பச்சனின் புகைப்படம் அச்சிடப்பட்டிருக்கும் இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது