கடந்த மார்ச் முதல் மேற்குறிப்பிட்ட சேவைகள் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
New Delhi: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 14.35 லட்சமாக அதிகரித்திருக்கக்கூடிய நிலையில், தற்போது நடைமுறையில் உள்ள அன்லாக் செயல்முறையின் மூன்றாவது கட்டத்தினை நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வந்துள்ளன.
இதன் அடிப்படையில் திரையரங்குகள், கட்டுப்பாடுகளுடன் உடற்பயிற்சி கூடங்களை திறக்க ஆலோசித்து வருவதாகவும், பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல மூடியிருக்க பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
சினிமா அரங்குகள் 25-30 சதவிகித மக்கள் எண்ணிக்கையில் செயல்பட அனுமதிக்க வேண்டுமென திரையரங்குகள் சங்கமானது, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு கோரிக்கை வைத்திருந்தது. இந்த கோரிக்கைகள் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
அன்லாக் 3வது கட்டத்தில் உடற்பயிற்சி கூடங்கள் பெரும் கட்டுப்பாடுகளுடன் இயக்க அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டெல்லி அரசானது, மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதியை கோரியுள்ளது. ஆனால், மத்திய அரசு இது குறித்து எந்த முடிவையும் இன்னும் எடுக்கவில்லை.
எதிர்வரும் நாட்களில் அதிக அளவிலான பண்டிகைகள் வருவதையொட்டி கட்டுப்பாடுகளை மத்திய அரசு கவனமாக தளர்த்தி வருகின்றது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏறத்தாழ 50 ஆயிரம் கொரோனா நோயாளிகள் புதியதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை 32,771 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இந்த தளர்வுகளை நடைமுறைப்படுத்த அரசு முயன்று வருகின்றது.
கடந்த மார்ச் முதல் மேற்குறிப்பிட்ட சேவைகள் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.