Read in English
This Article is From Jun 05, 2020

கொரோனா நோயாளிகளுக்கு ஒரு மணி நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும்: டெல்லி அரசு

இந்நிலையில், தனது அரசாங்கத்தின் முழு கவனமும் உயிர்களை காப்பாற்றுவதிலும், கொரோனா தொற்றிலிருந்து மக்களை முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பதிலும்தான் உள்ளது என டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement
இந்தியா
New Delhi:

தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2.26 லட்சத்தினை கடந்துள்ள நிலையில் தேசிய தலைநகர் டெல்லியில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 25 ஆயிரத்தினை கடந்துள்ளது. இந்நிலையில் தில்லி அரசு சமீபத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஒரு புதிய நிலையான இயக்க முறைமையை(SOP) வெளியிட்டுள்ளது.

தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக ஒருவர் கண்டறியப்பட்டால், 15 நிமிடங்களில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட நோயாளியின் எவ்வித விவரங்களும் இந்த இடைப்பட்ட காலத்தில் கேட்கப்படக் கூடாது. மருத்துவமனையில், பணியில் உள்ள மருத்துவர் ஒரு மணி நேரத்தில் புதியதாக அனுமதிக்கப்பட்ட நோயாளியை சிகிச்சைக்கு தயார்ப்படுத்த வேண்டும். இந்த இடைப்பட்ட நேரத்தில் காத்திருக்கும் நோயாளிகளுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் கிடைப்பதை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

மருத்துவமனையில் போதுமான படுக்கைகள் இல்லையெனும் பட்சத்தில் நோயாளியை வேறொரு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டிய பொறுப்பு, முதல் மருத்துவமனையினுடையதாகும். வேறு இடத்திற்கு மாற்றப்படும் வரை நோயாளிக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மேற்கொள்ள வேண்டும் என புதிய விதிமுறைகள் கூறியுள்ளது.

Advertisement

லேசான அறிகுறி அல்லது அறிகுறியற்ற நோயாளிகளுக்கான சிகிச்சை முறைகள் மற்றும் அவர்கள் எவ்வாறு தனிமைப்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்டவை குறித்து இந்த புதிய நிலையான இயக்க முறைமையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை அல்லது உணவு மற்றும் பிற வசதிகளின் தரம் குறித்து வரும் புகார்களுக்கென தனி உதவி எண்களை மருத்துவமனைகள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

Advertisement

தற்போது டெல்லியின் கொரோனா தொற்று நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,359 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 650ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

டெல்லியின் நிலைமையை மறு ஆய்வு செய்ய இணைய வழி கலந்துரையாடலுக்கு தலைமையேற்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் டெல்லி நிலை கவலையளிப்பதாக குறிப்பிட்டிருந்தார். சோதனையை விரைவுபடுத்துவதன் அவசியத்தையும், தொடர்பு தடமறிதல் மற்றும் கடுமையான கட்டுப்பாடு போன்றவற்றின் அவசியம் குறித்தும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

இந்நிலையில், தனது அரசாங்கத்தின் முழு கவனமும் உயிர்களை காப்பாற்றுவதிலும், கொரோனா தொற்றிலிருந்து மக்களை முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பதிலும்தான் உள்ளது என டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், 56 தனியார் சுகாதார நிலையங்களில் ஏழை எளிய மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கும் விகிதாச்சார எண்ணிக்கையில் படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement