2017-ல் நடந்த இந்த சம்பவத்திற்கு இன்று தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டையே உலுக்கிய உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியான முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் செங்கருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவோவில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். 2017-ல் நடந்த இந்த சம்பவத்திற்கு இன்று தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, செங்கர் தனது ஆயுள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தண்டனையை மாவட்ட நீதிபதி தர்மேஷ் சர்மா அறிவித்தார். இந்த வழக்கில் செங்கருக்கு ரூ. 25 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய உன்னாவோ பாலியல் பலாத்கார வழக்கில் கடந்த திங்களன்று செங்கர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தண்டனை 20-ம்தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இந்திய தண்டனை சட்டம், போக்சோ சட்டங்களின் அடிப்படையில் செங்கருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவோ மாவட்டம் பங்கர்மாவு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் செங்கர். அவர் 2019 ஆகஸ்டில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.