ரேபரேலிக்கு செல்லும் வழியில் அந்த பெண் சென்ற கார் விபத்துக்குள்ளானது.
Unnao: பாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் புகார் கூறிய பெண், குடும்பத்துடன் காரில் சென்ற போது பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அந்த பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த அந்த பெண் தற்போது ஆபத்து கட்டத்தை தாண்டிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உன்னாவ் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சாகர் மீது 2017ல் பாலியல் புகார் கூறினார். அதாவது அப்பெண் 15 வயதாக இருந்தப் போது வேலை குறித்து கேட்க, சென்றபோது, அவரை எம்.எல்.ஏ குல்தீப், பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் சரியான நடவடிக்கை எடுக்காதததால் அப்பெண் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து அந்த எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டார். பின்னர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு சென்ற அவரது தந்தை இறந்தார். அதற்கு சாட்சியாக இருந்தவரும் மர்மமான முறையில் இறந்தார்.
இந்நிலையில் அம்மா மற்றும் அத்தையின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்த அந்தப் பெண், தனது தாய், வழக்கறிஞர் மற்றும் உறவினருடன் காரில் ரேபரேலி-க்கு நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது அவரின் கார் மீது லாரி ஒன்று மோதியது. இந்த விபத்தில் அப்பெண்ணின் உறவினர் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் தொடர்ந்து இறப்புகள் நடந்துவருவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விபத்தை ஏற்படுத்திய லாரியின் நம்பர் பிளேட் மறைக்கப்பட்டுள்ளது மேலும் பல்வேறு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.