This Article is From Sep 14, 2018

இஸ்ரோ உளவாளி வழக்கு : “நம்பி நாராயணன் துன்புறுத்தப்பட்டுள்ளார்” – உச்ச நீதிமன்றம்

கேரள போலீசாரின் விசாரணை குறித்து முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.கே. ஜெயின் கமிட்டி ஆய்வு மேற்கொள்ளும் என்று அறிவிப்பு

இஸ்ரோ உளவாளி வழக்கில் பாதிக்கப்பட்ட முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஹைலைட்ஸ்

  • நாராயணனுக்கு மன உளைச்சலை போலீஸ் அளித்துள்ளது – கோர்ட்
  • முன்னாள் நீதிபதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
  • சட்டவிரோத முறையில் கைது செய்யப்பட்டதாக நம்பி வழக்கு
New Delhi:

இஸ்ரோவில் விஞ்ஞானியாக இருந்த நம்பி நாராயணன் கடந்த 1994-ல் இஸ்ரோ குறித்த ரகசியங்களை மாலத்தீவை சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கு விற்று விட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக நம்பி நாராயணன் மற்றும் டி.சசி குமரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து 50 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த நம்பி நாராயணன் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கு ஒருகட்டத்தில் போலீசிடம் இருந்து சிபிஐ-க்கு மாறியது. சிபிஐ விசாரணையில் நம்பி நாராயணன் குற்றமற்றவர் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. ஆனால் நம்பி நாராயணனை தேவையின்றி கைது செய்து நடவடிக்கை எடுத்த போலீஸ் உயர் அதிகாரிகள் சிபி மேத்யூ, கே.கே. ஜோஷ்வா மற்றும் எஸ். விஜயன் ஆகியோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து இந்த மூவருக்கும் எதிராக நம்பி நாராயணன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, நம்பி நாராயணனை தேவையின்றி கைது செய்து அவரை துன்புறுத்தியுள்ளனர். மன ரீதியில் கொடூரமாக சித்ரவதை செய்தலுக்கும் இதனை ஒப்பிடலாம். கேரள போலீஸ் அதிகாரிகள் 3 பேரை முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.கே. ஜெயின் கமிட்டி விசாரணை செய்யும். இந்த வழக்கில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நம்பி நாராயணனுக்கு ரூ. 50 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனை ஏற்றுக் கொள்வதாக கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு குறித்து என்.டி.டி.வி.க்கு நம்பி நாராயணன் அளித்த பேட்டியில், நீங்கள் என்னை இனிமேலும் கிரிமினல், தேச துரோகி என்று கூற முடியாது. எனக்கு எதிராக சதி செய்தவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். மனதளவில் நான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எனக்கு நிம்மதி அளிக்கிறது. எனக்கு வயதாகி விட்டது. நான் என் குடும்பத்தினருடன் சிலகாலம் இருக்க விரும்புகிறேன் என்றார்.

.