This Article is From Feb 13, 2020

கேஸ் சிலிண்டர்களை எடுத்துவந்து போராட்டம் நடத்திய எம்எல்ஏக்கள்!! உ.பி. சட்டசபையில் பரபரப்பு!

உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில் கவர்னர் ஆனந்திபென் படேல் உரை நிகழ்த்த தொடங்கியதும், சமாஜ்வாதி கட்சி எம்.எல்ஏ.க்கள் அவையின் மையப் பகுதிக்கு சென்று முழக்கத்தில் ஈடுபட்டனர்.

சட்டமன்றத்தில் நடந்த காட்சிகளை தனது இருக்கையில் அமர்ந்தவாறு முதல்வர் ஆதித்யநாத் பார்த்துக்கோண்டே இருந்தார்.

Lucknow:

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, குடியுரிமை சட்டதிருத்தம் உள்ளிட்டவற்றை கண்டித்து உத்தரப்பிரதேசத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேஸ் சிலிண்டரை சட்டமன்றத்திற்கு கொண்டு வந்து போராட்டம் நடத்தினர். இதனால் அவையில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

சட்டமன்றத்தில் சபாநாயகர் ஆனந்திபென் உரை நிகழ்த்த தொடங்கியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறிப்பாக சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். 

அவர்களில் பலர் கைகளில் பதாகைகளை வைத்திருந்தனர். அதில் குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி., என்.பி.ஆருக்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் முஸ்லிம்களுக்கு எதிரானது என்று கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. 

சமையல் எரிவாயு உருளையின் விலை உயர்ந்துள்ள நிலையில் சில எம்.எல்.ஏ.க்கள் அவைக்கு சிலிண்டரை எடுத்து வந்து போராட்டம் நடத்தினர்.

இந்த காட்சிகளை தனது இருக்கையில் இருந்தவாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் பார்த்துக் கொண்டே இருந்தார்.

சட்டமன்றத்திற்கு வெளியேயும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நீடித்தது. சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விலைவாசி உயர்வை கண்டித்து ரிக்சா ஓட்டுனர்களுக்கு தக்காளிகளை வழங்கினர். 

உத்தரப்பிரதேசத்தில் மாநில பட்ஜெட் எதிர்வரும் செவ்வாயன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. 

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்டவற்றை கண்டித்து போராட்டங்களை தீவிரப்படுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளும் உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்படவுள்ளது. 

.