மீரட்டில் உள்ள லால்குர்தி காவல் நிலையத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது
Meerut (Uttar Pradesh): உத்தர பிரதேச மாநில மீரட்டில் காவலர்கள் பலர், திருநங்கைகளை சரமாரியாக தாக்கும் சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டு ஆன்லைனில் வைரலாகி வருகிறது.
மீரட்டில் உள்ள லால்குர்தி காவல் நிலையத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இரு திருநங்கைகள் குழுக்களிடையே பிரச்னை வெடித்தது என்றும் இதனால் இரு குழுக்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர் என்றும் கூறப்படுகிறது.
இந்த கும்பல் சண்டை மீரட்டின் ஒரு பகுதியில் வெடித்ததைத் தொடர்ந்து போலீஸுக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ், சமாதான முயற்சியில் ஈடுபட்டனர். காவல் நிலையத்துக்கு வந்து புகார் தெரிவிக்குமாறும் அவர்களிடம் கூறியுள்ளது போலீஸ்.
காவல் நிலையத்திலும் திருநங்கைகள் இடையே மோதல் வெடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் போலீஸ் தடியடி நடத்தினார்களாம்.
சிறப்பு சூப்பிரின்டென்ட் நிதின் திவாரி, இது குறித்து பேசுகையில், “காவல் நிலைய வளாகத்தில் மோதலில் ஈடுபட்டதால் அதைக் கட்டுப்படுத்த தடியடி நடத்த வேண்டியதாக இருந்தது. அதே நேரத்தில் தேவைக்கு அதிகமாக போலீஸ் நடவடிக்கை எடுத்திருந்தால் அது குறித்து விசாரிக்கப்படும்” என்று விளக்கம் அளித்துள்ளார்.
திருநங்கைகள், பொது மக்களிடமிருந்து பணம் பறிப்பது தொடர்பாக பல வழக்குகள் தொடர்ந்து பதிவான வண்ணம் இருக்கின்றன. இது குறித்து வெளியான ஒரு ஆர்.டி.ஐ தகவலில், “கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 73,000 திருநங்கைகள், பொது மக்களிடமிருந்து பணம் பறித்தக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் சுமார் 20,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று ரயில்வேதுறை அமைச்சகம் கூறுகிறது.
சமூகம், திருநங்கைகளை பாரபட்சமாக நடத்துவதால், அவர்கள் வேறு வழியில்லாமல் இதைப் போன்ற விஷயங்களில் ஈடுபடுவதாக கூறுகின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள்.